• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உ.பி.தொழிலதிபர் கைது

Byவிஷா

May 19, 2025

பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) க்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஷாஜாத் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு படையினரால் (எஸ்டிஎப்) கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான விசாரணையில், ஷாஜாத் தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய தகவல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார் என்பதும், அவர் பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு பல முறை பயணம் செய்து, எல்லையைத் தாண்டி அழகுசாதனப் பொருட்கள், உடைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ முகவர்களுக்கு ஷாஜாத் பணம் மற்றும் இந்திய சிம் கார்டுகளை வழங்கியதும், ராம்பூர் மாவட்டம் மற்றும் உத்தரபிரதேசத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த நபர்களை ஐ.எஸ்.ஐ-க்காக வேலை செய்ய பாகிஸ்தானுக்கு அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவ்வாறு பாகிஸ்தான் சென்ற நபர்களின் விசாக்கள் ஐ.எஸ்.ஐ முகவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பிய குற்றச்சாட்டில் ஹரியானாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஷாஜாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டவர். இவர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் ஒரு பாகிஸ்தான் ஊழியருடன் தொடர்பில் இருந்துகொண்டு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.