தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் அரசு விதிமுறைகளை மீறி தண்ணீர் திறக்கப்பட்டதாகக் கூறி, தவெக நிர்வாகிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோத்துப்பாறை அணையின் முழுக் கொள்ளளவான 126.28 அடியை எட்டியதைத் தொடர்ந்து, பழைய ஆயக்கட்டு வாய்க்கால் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு கண்மாய்களுக்குச் சென்று வந்தது.
இந்நிலையில், புதிய ஆயக்கட்டு வாய்க்கால் ஷட்டர் வழியாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அரசு அனுமதியின்றி தண்ணீரைத் திறந்து விட்டதாகவும், அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
இதனைக் கண்டித்து, பாஜக மாவட்டத் தலைவர் ராஜபாண்டி தலைமையில் அக்கட்சியினர் பெரியகுளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, செயற்பொறியாளர் சரவணன் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, அலுவலக நுழைவாயில் முன்பு பாஜகவினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போராட்ட இடத்திற்கு வந்த செயற்பொறியாளர் சரவணனிடம் பாஜகவினர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால், எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காமல் அவர் அங்கிருந்து திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பொதுப்பணித்துறையினரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், அணையில் விதிமுறைகளை மீறி தண்ணீர் திறந்தவர்கள் மீதும், அதற்குத் துணைபோனதாகக் கூறப்படும் அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தினர்.