விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவரின் கணவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது குழந்தைக்கு சளி பாதிப்பு ஏற்பட்டதால், குடும்ப மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக இளம்பெண் தனது பெற்றோருடன் பேருந்து மூலம் மதுரைக்கு வந்துள்ளார்.

விருதுநகர் பகுதியில் கிளினிக் நடத்தி வந்த மருத்துவர் துரைராஜ், தற்போது மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள ஷிவானி தனியார் கிளினிக்கில் மருத்துவம் பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காலையிலேயே கிளினிக்கிற்கு சென்ற அவர்கள், மருத்துவர் வெளியூரில் இருப்பதாக அங்கிருந்த ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அலைபேசி மூலம் மருத்துவரைத் தொடர்புகொண்டபோது, தான் கிளினிக்கிற்கு வந்து கொண்டிருப்பதாகவும், காத்திருக்க விரும்பினால் காத்திருக்கலாம் என்றும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைக்கு சிகிச்சை பெற்றுவிட்டுச் செல்லலாம் எனக் கருதி அவர்கள் கிளினிக்கிலேயே காத்திருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாலையில் கிளினிக்கிற்கு வந்த மருத்துவர் துரைராஜிடம், இளம்பெண் தனது குழந்தையை காண்பித்து சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் மருந்து வாங்குவதற்காக மருத்துவர் மருந்துச் சீட்டு எழுதிக் கொடுத்துள்ளார்.
அப்போது, தனக்கும் தோள்பட்டையில் வீக்கம் மற்றும் வலி இருப்பதாக இளம்பெண் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக அறைக்குள் வருமாறு மருத்துவர் அழைத்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் பெற்றோரும் உடன் சென்ற நிலையில், அவர்களை வெளியே இருக்குமாறு மருத்துவர் கூறியதாகத் தெரிகிறது.

இதனால் பெற்றோர் வெளியே சென்ற நிலையில், அறைக்குள் இருந்த இளம்பெண்ணிடம் மருத்துவப் பரிசோதனை செய்வதாகக் கூறி மருத்துவர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டு அழுதபடி வெளியே வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அவசர காவல்துறை உதவி எண் 100-ஐ தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், பாதிக்கப்பட்ட இளம்பெண் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மருத்துவர் துரைராஜ் மீது பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மருத்துவர் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்
இதற்கிடையே, புகாருக்குள்ளான மருத்துவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சென்ற அவர்கள், தரையில் அமர்ந்து மருத்துவரைக் கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மருத்துவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவரைக் கைது செய்ய வேண்டும் எனக் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.