உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறுகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில், மாட்டுப் பொங்கல் தினத்தில் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
அந்த வரிசையில், உலகளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கியது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உட்பட பலர் உடன் உள்ளனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்து 786 காளைகளும், 1698 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்தனர். இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றிபெறும் காளைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசும், வெற்றுபெறும் மாடுபிடி வீரருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் தங்கக் காசுகள், சைக்கிள், பீரோ, மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், சில்வர் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது