சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த வடமாநில பேக்கரி தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பு பயின்று வரும் மாணவிகள், நேற்று மாலை கல்லூரி வளாகம் அருகே ஸ்ரீராம் நகர் பிரதான சாலையில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளனர். அதே பேக்கரியில் பணிபுரியும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், திடீரென மாணவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்ததைத் தொடர்ந்து, அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்த புகார் அனுப்பப்பட்டு, பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணையைத் தொடர்ந்து பேக்கரியில் பணியாற்றிய உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் (29) என்பவரை காவல்துறையினர் கைது செய்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் பேக்கரி ஊழியர் மட்டும் தான் ஈடுபட்டாரா அல்லது வேறு எவரேனும் தொடர்பில் உள்ளாரா என்பது குறித்து உரிய விசாரணையை நடத்த வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.