• Fri. Apr 19th, 2024

மே மாதம் அமைச்சராக முடி சூடும் உதயநிதி… துறையை முடிவு செய்த ஸ்டாலின் !

அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை ஒதுக்கப்போகிறார்கள் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.திமுக அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், அவதூறு பேச்சால் இலக்கா மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவைக்குள் கொண்டு வரும் வேலைகள் வேகமெடுத்துள்ளன.

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று இன்னும் சுமார் இரண்டு வாரங்களில் ஓர் ஆண்டு நிறைவடையப் போகிறது. இந்த நிலையில் தான் உதயநிதிக்கு முடி சூட்டிவிடலாம் என கருதி அதற்கான இலக்காவும் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.ஜூன் மாதம் அமைச்சரவை மாற்றம் கட்டாயம் என பல தரப்பிலிருந்தும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. உதயநிதிக்கு எந்த துறை என்பதில் பல்வேறு யூகங்கள் கிளம்பின. பள்ளிக்கல்வித்துறையை ஒதுக்கப்போகிறார்கள் என ஒரு தரப்பும், ஸ்டாலின் ஏற்கெனவே வகித்த உள்ளாட்சித் துறை கொடுக்கப்போகிறார்கள் என ஒரு தரப்பும் பேசி வருகின்றனர்.

உள்ளாட்சித் துறையானது நகர்ப்புற உள்ளாட்சி, ஊரக உள்ளாட்சி என இரண்டாக பிரிக்கப்பட்டு கே.என்.நேரு, கே.ஆர்.பெரிய கருப்பன் ஆகியோரிடம் உள்ளது. இரண்டையும் மீண்டும் ஒன்றாக்கி உதயநிதியிடம் கொடுத்தால் தமிழ்நாடு முழுக்க அவர் சென்று வருவார். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதியை முன்னிறுத்த இது பயன்படும் என்று காரணம் சொல்லப்பட்டது.அதேபோல் பள்ளிக்கல்வித்துறைதான் என்று சொல்பவர்கள் சில காரணங்களை சொல்கிறார்கள். மாணவர்களுக்கான சில திட்டங்களை முன்னெடுத்தால் அடுத்த தலைமுறை வாக்காளர்கள் மனதில் இப்போதே இடம் பிடித்துவிடலாம் என்று கருதுவதாக சொல்லப்பட்டது.

ஆனால் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை உதயநிதிக்கு வழங்க வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 110 விதியின் கீழ் அந்த துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு விளையாட்டுத்துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இதுவும் உதயநிதிக்கு விளையாட்டுத்துறையை ஒதுக்கீடு செய்ய ஒரு காரணமாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *