இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்டோபர் 31ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
அதனை ஒட்டி இந்த ஆண்டு மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் ஒற்றுமை சிலையில் 31ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் பங்கேற்க இந்தியாவின் நான்கு திசைகளில் இருந்தும் காவல்துறை சார்பாக இருசக்கர வாகன பேரணி செல்கிறது. அதன் ஒரு பகுதியாக தென் திசையில் தமிழ்நாட்டு காவல்துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி செல்கிறது. அதற்காக முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து இன்று இருசக்கரவாகன பேரணி துவங்கியது.
25 இருசக்கரவாகனங்களில், 2085 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும் காவல்துறையினருடன் 16 உதவியாளர்களும் செல்கின்றனர். இருசக்கர பேரணியை சிறப்பு ஆயுதப்படை கூடுதல் காவல்துறை இயக்குனர் எ.டி.ஜி.பி., அபய்குமார் சிங் மற்றும் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கொடி அசைத்து துவங்கி வைத்தனர். இப்பேரணியானது திண்டுக்கல், ஓசூர், ஹூப்வி, புனே வழியாக குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள பட்டேல் சிலையை 10 நாட்களில் வரும் 24 ம் தேதி சென்றடைகின்றனர். பின்னர் 31 ம் தேதி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.