வெளிநாட்டு சொகுசு கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.48 லட்சத்து 80 ஆயிரம் வசூல் செய்து மோசடி செய்த வழக்கில் பெண் உட்பட 2 நபர்கள் எப்-4 ஆயிரம்விளக்கு காவல் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, பள்ளிக்கரணையை சேர்ந்த வினோத் (வயது 35) என்பவர் முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள குட்லீப் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு சென்றுள்ளார். வினோத்தை நேர்காணல் செய்த அந்நிறுவனத்தின் இயக்குநர் ராஜா மற்றும் அவரது உதவியாளர் திவ்யபாரதி ஆகிய இருவரும் மேற்படி வினோத்திடம் வெளிநாட்டு சொகுசு கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சத்தை கம்பெனியின் வங்கிகணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
அதன்படி கடந்த 27.01.2021 அன்று வினோத் மேற்படி கம்பெனியின் வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளார். ஆனால் பேசியபடி வேலைவாங்கி கொடுக்காமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து வினோத் எப்-4 ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
எப்-4 ஆயிரம்விளக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.ராஜா (வயது 35), தூத்துக்குடி மாவட்டம் 2.திவ்யபாரதி (வயது 27), பூந்தமல்லி, சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மேற்படி ராஜா மற்றும் திவ்யபாரதி ஆகிய இருவரும் வெளிநாட்டு சொகுசு கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி 43 நபர்களிடம் சுமார் ரூ.48 லட்சத்து 80 ஆயிரம் வசூல் செய்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.