

மணிப்பூரில் சிஆர்பிஎஃப் வீரர், சகவீரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விபரீத சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மேற்கு இம்பால் மாவட்டம் லாம்சாங் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எஃப்- 120 பட்டாலியனைச் சேர்ந்த வீரர் ஒருவர், திடீரென முகாமில் இருந்த வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். இதில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய வீரரும், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிஆர்பிஎஃப் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், முகாமில் வீரர் ஒருவர், திடீரென துப்பாக்கியால் இருவரை சுட்டுக் கொன்று விட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

