

ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது, இப்போராட்டத்தில் தலைமையேற்று பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் ரஹமத்துல்லா, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து விமர்சித்தார். அதோடுமட்டுமல்லாமல், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்கும் விதமாக பேசியதாக புகார் எழுந்தது
அவர் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்ட தலைவர் அசன் பாட்ஷா, மதுரை மாவட்ட துணை செயலாளர் ஹபிபுல்லா ஆகிய 3 பேர் மீது சாதி, மத, இனம், சமயம் சம்பந்தமாக விரோத உணர்ச்சியை துண்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் நெல்லையில் இருந்த ரஹமத்துல்லாவை மதுரை தனிப்படையினர் கைது செய்து மதுரைக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் தீர்ப்பு அளித்த நீதிபதிகளை காட்டமாக விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.