எப்போதெல்லாம் தேவையும் கடன் சுமையும் கழுத்தை நெருக்குகிறதோ, அப்போதெல்லாம் தன்னிடமுள்ள தங்கத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி, குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்பவர்கள் பெண்கள்.
நம் நாட்டு விளிம்புநிலைப் பெண்களைப் பொறுத்தவரை தங்கம் அணிகலனோ, ஆடம்பரமோ, பகட்டோ அல்ல. அது ஒரு கேடயம். எப்போதெல்லாம் தேவையும் கடன் சுமையும் கழுத்தை நெருக்குகிறதோ, அப்போதெல்லாம் தன்னிடமுள்ள தங்கத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி, குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்பவர்கள் பெண்கள்.
இந்த உளவியலை உணர்ந்துதான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் 1989-ல் தாலிக்குத் தங்கம் திட்டம் என்னும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளைப் பெற்றோர்கள் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவியும் தங்கமும் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தத் திட்டத்துக்கான தொகையையும், தங்கத்தின் அளவையும் அதிகப்படுத்தினார்.
இந்த சூழலில், முதல்முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலினும் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி தாலிக்குத் தங்கம் திட்டத்தின்கீழ், திருமண நிதியுதவி, தங்கம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதற்காக 5 வகையான திருமண நிதியுதவி திட்டங்களுக்கும் 2021-22-ம் நிதியாண்டுக்கு ரூ.762.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பட்டம், பட்டயப் படிப்பு படித்த 53,599 பயனாளிகள், பட்டதாரியல்லாத 41,101 பயனாளிகள் என மொத்தம் 94,700 பயனாளிகள் பயனடைந்தனர்.
இந்த சூழலில், 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ’’மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது.
இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.