தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் தங்கப்பழம் என்பவர், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 1. கி.மீ. தொலைவில் உள்ள திருமலாபுரத்தில் 2.5 ஏக்கர் நிலத்தில் பண்ணைத் தோட்டம் அமைப்பதற்கான பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளார். அப்பகுதியை அவர் தோண்டும்போது ஆற்று மணல் தென்பட்டன. பின்னர் 4அடி ஆழம் தோண்டிய பிறகு பனை ஓடுகள் உடைந்து வெளியே வந்தன. இதைக்கண்ட அவர் பண்டைத் தமிழர்கள் வாழ்ந்ததற்கான இடமாக இருக்கும் என கருதியதால் மிக கவனமாக தோண்டச் சொல்லியுள்ளார்.

இதன் பிறகு அங்கு பெரியது, சிறியதுமாக முதுமக்கள் தாழி கிடைத்தன. இந்த முதுமக்கள் தாழியின் ஒரு பக்கத்தில் ஒரு படம் வரையப்பட்டுள்ளது. இதற்கு முன் கிடைத்த முதுமக்கள் தாழியில் இது போன்ற படம் வரையப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இரும்பினாலான ஈட்டி, வில், வாள், பித்தளை செம்பு, குழந்தைகள் விளையாடுவதற்கான பொருள்கள் என 100-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. செம்பு பாத்திரம் ஒன்றும் அதில் கிடைத்துள்ளது. அதில் 6 வகையாக கோடுகள் பிரிக்கப்பட்டுள்ளது. மூடி ஒன்றில் ஏதோ குறியீடு போடப்பட்டுள்ளது. மேலும் மிக லேசான ஒடுகளால் மண்பாண்ட பொருள்கள் உள்ளன. சில இடங்களில் எலும்புகள் கிடைத்துள்ளன. அவற்றை தங்கப்பழம் சேகரித்து பத்திரமாகப் பாதுகாத்து தனி அறையில் வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர், தென்காசி தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அந்த இடத்தை பார்வையிட்ட தொல்லியல் துறையைச் சேர்ந்த ஹரிகோபால கிருஷ்ணன் ‘கீழடி ஆதிச்சநல்லூர் போல பண்டையத் தமிழர்கள் பயன்படுத்திய அரியவகை பொருள்கள் உள்ளன’ என்ற அவர், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யும் வரை அந்த இடத்தை தோண்ட வேண்டாம் என தெரிவித்த்துள்ளார். எனவே தங்கப்பழம் தோண்டும் போது கிடைத்த பொருட்களையும், இடத்தையும் பாதுகாத்து வருகிறார்.