

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27ல் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிழாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து தாமதமாகி வருகிறது. கடந்த பிப். 13-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னர் பேச்சுவார்த்தை நடத்த அரசுத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். மற்ற துறை ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்குவதுடன், ஒப்பந்த நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு சமமாக அகவிலைப்படி, 22 மாத ஓய்வுகாலப் பலன், ஓய்வு பெற்றவுடன் பணப்பலன், ஓய்வூதியத்துடன் ஒப்பந்தப் பலன் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரிசு வேலை வழங்குவதுடன், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 100 மையங்களில் வரும் 27-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

