

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் முன்பாக நேற்று இரவு சுமார் 65 வயது முதியவர் ஒருவர் இரண்டு இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டு வந்தார்.
இதனைக் கண்ட அப்பகுதியில் சென்ற சிலர் இளைஞர்களை தடுக்க முற்படவே அந்த இளைஞர்கள் யாரையும் கண்டு கொள்ளாமல் அந்த முதியவரை ரத்தம் சொட்ட, சொட்ட கற்களாலும் கை, கால்களை கொண்டும் கடுமையாக தாக்கி உள்ளனர். இதை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் துணிச்சலுடன் இரண்டு இளைஞர்களையும் பிடித்து நிறுத்தவே, அங்கு இருந்த சில இளைஞர்கள் அந்த இரண்டு இளைஞர்களையும் தர்ம அடி கொடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதே வேளையில் முதியவர் ரத்தம் சொட்ட, சொட்ட அப்பகுதியில் ஓரமாக அமர வைக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வரவே போலீசாரிடம் குடிபோதையில் முதியவரை தாக்கிய இரண்டு இளைஞர்களையும் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு இளைஞர்களும் நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியைச் சேர்ந்த திவாகரன் மற்றும் விஜய் என்பதும், கோவை காந்திபுரம் பகுதியில் அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி வரும் இருவரும் கிடைக்கும் வேலைகளுக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு மது அருந்துவதும், அவ்வப் போது இது போன்ற தகராறுகளில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்து உள்ளது.
இதே போல் தாக்குதலுக்கு உள்ளான முதியவர் வேலூரைச் சேர்ந்த ராமசாமி என்பதும் தெரியவந்து உள்ளது. தொடர்ந்து அதீத மதுபோதையில் இருந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் அவர்கள் மீது ஏற்கனவே ஏதாவது வழக்குகள் உள்ளதா ? கோவையில் எதற்காக ? அவர்கள் தங்கி உள்ளனர். என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு காந்திபுரம் ஜி.பி சந்திப்பு அருகே நள்ளிரவில் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வரும் சூழலில் தற்போது ஓரமாக அமர்ந்து உணவு அருந்திக் கொண்டு இருந்த முதியவரை தாக்கிய இருவர் போலீசாரிடம் சிக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் மது போதையில் முதியவரை தாக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

