• Sat. Apr 20th, 2024

போக்குவரத்து விதிமீறல் அபராதம்: எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு..!

ByA.Tamilselvan

Nov 7, 2022

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து, தமிழக அரசு கடந்த அக்டோபர் 19-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம், தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கபடுவார்கள் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், இயந்திரக் கோளாறு, கவனக் குறைவுடன் வாகனம் இயக்குவது, போதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், அபராத தொகை அதிகரித்துள்ளதன் மூலமாக அதை அமல்படுத்துவதற்கு காவல்துறையினர், அப்பாவி மக்களை துன்புறுத்துவர் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அபராத தொகையை உயர்த்தும் முன் பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *