பெங்களூருவில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு, போக்குவரத்து போலீசார் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே தனி நபர் வாகனங்கள் அதிகம் கொண்ட நகரங்களில் பெங்களூருவும் ஒன்று. இந்நகரின் தினசரி போக்குவரத்தில் 60 சதவீதம் இருசக்கர வாகனங்கள் என்பது கவனிக்கத்தக்கது. இவற்றைச் சமாளிப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இந்நிலையில் தான் ஏஐ தொழில்நுட்பத்தை புகுத்த பெங்களூரு போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஏஐ தொழில்நுட்பம் என்ன செய்யப் போகிறது? என்ற கேள்வி எழலாம். அதாவது, ரியல் டைம் டேட்டாக்களை சேகரிக்கும். அதற்கேற்ப சிக்னல்கள் அட்ஜெஸ்ட் செய்யப்பட்டு வாகனங்களுக்கு வழிவிடப்படும். வழக்கமாக செட்டிங் செய்யப்பட்ட நிமிடங்களில் இருந்து சிக்னல்கள் மாற்றிக் கொள்ளப்படும். இந்த திட்டம் பெங்களூரு போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு பகுதியாகும். புதிய திட்டம் அமலானால் போக்குவரத்து சீராகும்.
போக்குவரத்து போலீசார் ஒவ்வொரு சிக்னல்களிலும் தாமாக தலையிட்டு எந்தவித மாற்றங்களையும் செய்ய வேண்டியதில்லை. இந்த திட்டத்தை கடந்த மே மாதம் முதலே பெங்களூரு போக்குவரத்து போலீசார் செயல்படுத்தி வருகின்றனர். தற்போது பயன்பாட்டில் உள்ள 136 ஜங்ஷன்களை அப்கிரேட் செய்தல், 29 புதிய ஜங்ஷன்களை இன்ஸ்டால் செய்தல் என மொத்தம் 165 போக்குவரத்து சிக்னல்களில் ஏஐ தொழில்நுட்பம் அமல்படுத்தப்படவுள்ளது.
இதுவரை 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ டெக்னாலஜி ட்ராபிக் சிக்னல்கள் தொடர்பாக பேசிய பெங்களூரு மாநகர போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் எம்.என்.அனுசேத், சிஸ்டமானது போக்குவரத்து மேலாண்மையில் புதிய மைல்கல் என்று சொல்லலாம்.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப வசதிகள் பெரிதும் உதவிகரமாக இருக்கும். இதன் கேமரா சென்சார்கள் ஒவ்வொரு ஜங்ஷன்களின் அருகிலும் வைக்கப்படும். ரியல் டைமில் ட்ராபிக் எப்படி இருக்கிறது என்பதை கவனித்து அதற்கேற்ப போக்குவரத்தை சரிசெய்யும். இது வாகன ஓட்டிகள் சீரான பயண அனுபவத்தை அளிக்கும் என்று குறிப்பிட்டார்.