

சென்னையில் இருந்து லண்டனுக்கு செல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில், திடீர் இயந்திரக் காரணமாக, இன்று சென்னை- லண்டன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்குவதற்கு முன்னதாக, விமானி இயந்திர கோளாறை கண்டுபிடித்ததால், விமானத்தில் பயணிக்க இருந்த 206 பயணிகள், 14 விமான ஊழியர்கள், 220 பேர் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.

சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை 5.35 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் இன்று 206 பயணிகள், 14 விமான ஊழியர்கள், 220 பேர் பயணிக்க இருந்தனர். விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு முன்னதாக விமானி, விமானத்தின் இயந்திரங்களை சரி பார்த்தார்.
அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்து, இந்த நிலையில் விமானத்தை இயக்கினால் பெரும் ஆபத்து என்று கருதினார். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு சரி செய்ய முயற்சித்தனர்.
இன்று காலை 8 மணி வரையில், விமானத்தின் இயந்திரங்களை சரி செய்ய முடியவில்லை. இதனால் பல மணி நேரமாக காத்திருந்த 206 பயணிகள், விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. அதோடு விமானத்தில் பயணிக்க காத்திருந்த 206 பயணிகளும், சென்னை விமான நிலையத்தில் இருந்து சொகுசு பேருந்துகளில் ஏற்றப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பழுதடைந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து அகற்றப்பட்டு, பழுதடைந்த விமானங்களை பழுது பார்க்கும் இடமான ஃபே எண் 101 ல், கொண்டு நிறுத்தப்பட்டது.
இந்த விமானம் பழுதுபார்க்கப்பட்டு நாளை அதிகாலை லண்டனுக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லண்டன் செல்ல வந்திருந்த 206 பயணிகள், சென்னையில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த, உடனடி நடவடிக்கை காரணமாக, விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, விமானத்தில் பயணிக்க இருந்த 206 பயணிகள்,14 விமான ஊழியர்கள் உட்பட 220 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

