• Wed. Mar 19th, 2025

கணித உலகில் உலக பை (π) தினம் இன்று

ByKalamegam Viswanathan

Jul 22, 2023

பை தினம் π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். பை தினம் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 π யின் பரவலாக அறிந்த அண்ணளவு 22/7 இது கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக π ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926). ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது. π நாள் முதன்முறையாக 1988ல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது.

அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது. அமெரிக்க இயற்பியல் அறிஞர் லேரி ஷா (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார். எங்கெல்லாம் வட்ட வடிவம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் π என்கிற மிக முக்கிய எண் தோன்றுகிறது. பண்டைய மனிதன் பல வித வடிவங்களையும் பார்க்கத் துவங்கிய போது வட்ட வடிவம் மட்டும் அவனுக்கு வினோதமாகப் பட்டது. இயற்கையில் பெரும்பாலான பொருட்கள் வட்ட வடிவத்தில் காணப்படுவதால் இயற்கையோடு பை பின்னிப் பிணைந்துள்ளது என்று கூறலாம். கன வடிவங்களான கோளம், கூம்பு, உருளை போன்றவற்றின் மேற்பரப்பு, கொள்ளளவு மதிப்புகளில் π காணப்படுகிறது. இதனால் π -ன் மதிப்பு, கோள்களின் சுழற்சிக் காலம், ஓர் ஊசலின் கால அளவு, அதிகபட்சத் தரவு மதிப்புகள், நிகழ்தகவு மதிப்புகள் போன்ற எண்ணற்ற விஷயங்களுக்குப் பயன்படுகிறது. ஆர்க்கிமிடிஸ் வழங்கிய தோராய மதிப்பான 3.14 என்ற எண்ணையே இன்று நாம் π -யின் மதிப்பாகக் கருதிக்கொள்கிறோம். 3.14 என்ற எண் π -யின் உண்மை மதிப்புக்கு இரண்டு தசம இலக்கங்கள் வரையே சரியாக அமைகிறது.