உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக மாறிவிட்டது – உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) (மே 17)
உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு 2005ஆம் ஆண்டு தூனிசில் நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாட்டை அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் 1865ஆம் ஆண்டு இந்த நாளன்று நிறுவப்பட்டதைக் கொண்டாடும் விதமாக உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள் என அறியப்பட்டு வந்தது. 1973ஆம் ஆண்டு இதற்கான தீர்மானம் மாலேகா-டொர்ரெமோலினோசில் நடந்த முழு அதிகாரம் கொண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது. உலக தகவல் சமூக நாளின் முதன்மையான நோக்கம் உலகளவில் புதிய தகவல் தொழில்நுட்பங்களாலும் இணையத்தாலும் ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை வளர்ப்பதாகும். மேலும் இது எண்ணிம இடைவெளியைக் குறைப்பதற்கு உதவிடும் இலக்கையும் கொண்டுள்ளது.
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். அறிவின் வளர்ச்சியும் தேவையும் புதியன கண்டுபிடிக்கும் நோக்கத்தை வளர்த்தன, குகைகளில் தங்கி வாழ்ந்த ஆதிமனிதன் குகைகளில் தீட்டியசித்திரங்கள், தனது எண்ணம் மற்றும் சிந்தனையை மற்றவர்க்குத் தெரிவிக்கும் கருவியாகவே அமைந்திருந்தது. தொடர்பு முறை ஒலி எழுப்புதல், சைகை மொழி, வரிவடிவ முறையாக முன்னேறியது முதல் நான்காம் தலைமுறை நுட்பங்கள் வரையிலான பாய்ச்சல், தொலைத் தொடர்புத்துறையில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள புறாக்களைப் பயன்படுத்தினான் என்று வரலாறு கூறுகின்றது. ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்திப்பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம். நவீன தகவல் தொடர்பின் வரலாற்றுப் பின்னணியை நோக்குமிடத்து 1450களில் ஜோகன்ஸ் கட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த நிகழ்வு வரை முன்னோக்கிச் செல்லும். அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜோகன்ஸ் கட்டன்பர்க் தனது வாழ்நாளில் கண்டுபிடிப்புக்கான பாராட்டைப் பெறாமலேயே இறந்து போனார்.
தொலைத்தொடர்பின் அடுத்த திருப்புமுனை கிரஹாம் பெல்லினால ஆரம்பித்து வைக்கப்படுகிறது. கிரஹாம் பெல்லின் தொலைபேசிக் கண்டுபிடிப்புடன் தொலைத்தொடர்பு புதிய பரிமாணத்தைப் பெறுகின்றது. தந்தி முறையை மேம்படுத்த கிரஹாம் பெல் எடுத்த முயற்சிகளின் விளைவே தொலைபேசி. தோமஸ் வாட்சன் தொலைபேசியை வடிவமைத்தாலும், மின்சாரம் மூலம் ஒலியை எடுத்துச் செல்வது பெல்லின் மூளையில் உதித்த யோசனையாகும். ஒரே சமயத்தில் இரண்டு சமிக்ஞைகள் தந்தி வயர் மூலம் அனுப்ப 1875ம் ஆண்டில் ஏப்ரல் 6 ஆம் நாள் அரசாங்கம் அனுமதித்தது. கிரஹாம் பெல் இம்முறையை மேம்படுத்தி 1876 மார்ச் 07ஆம் நாள் ஒலியைத் தந்தி வயர் மூலம் பரிமாறச் செய்து காட்டினார். இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட நவீன தொலைதொடர்பின் மூலங்கள் கம்பியில்லாத் தந்தி கண்டுபிடிக்கப்பட்டதும், தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடையத் தொடங்கியது. இத்துறையில் வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, கையடக்கத் தொலைபேசி, டெலக்ஸ், பெக்ஸ், மின்னஞ்சல், இணையம், முகத்துக்கு முகம் பார்த்துக் கதைக்கும் தொலைபேசி இணைப்புகள், செய்மதித் தொடர்புகள் என்பன தொலைத் தொடர்புத்துறையில் மனிதன் அடைந்த சாதனைகளின் எச்சங்களாகும்.
தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பத்தையும் (Information Technology) போஷித்து வருகிறது. இவ்வாறாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியின் பேறுகளாகும். 1865ல் உருவான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் (International Telecommunication Union (ITU)) உலக தொலைத்தொடர்பு தினத்தை அனுஷ்டிக்கிறது. மனிதனின் தகவல் தொடர்புகள், செய்மதிப் பரிமாற்றம், கல்வியூட்டல், கருத்துப் பரிமாற்றம், பொழுதுபோக்கு, கலை வெளிப்பாடு, வர்த்தகம், முன்னெச்சரிக்கையான பல தேவைகளுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகின்றது. சூறாவளிகள், எரிமலைகள், பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்த வேளைகளிலும், போர்மூட்டம், பாதுகாப்பு, தொற்றுநோய் போன்ற சந்தர்பங்களிலும் அறிவுறுத்தல்களை வழங்குவதால் மக்கள் முதற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. நிவாரண நடவடிக்கைகளைக்கூட இன்று நடமாடும் கம்பியில்லாத் தொலைபேசி மூலம் துரிதமாக மேற்கொள்ள முடிகிறது. உலகளவிய ரீதியில் செல்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில் 5 பில்லியனைத் தாண்டியிருந்ததாக என ஐ.நா சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் தெரிவித்திருந்தது
அண்மைக்காலத்தில் கணினி முறைக்கும் தொடர்பில் தொழில்நுட்பத்துக்கும் இடையில் ஓர் இணைவுப்போக்கு செயல்பட்டு வருகின்றது. தகவல்களைச் சேமித்து வைக்கவும், மீண்டும் பார்க்கவும் பாரிய அளவிலான வசதிகளைக் கணினிகள் வழங்குகின்றன. இவை இணையம் எனப்படும் இன்டர்நெட் முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்டர்நெட் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட அதி நவீன சாதனையாகும். உலகளாவிய நாடுகள் இந்த வலைப்பின்னல் அமைப்பில் இணைந்துள்ளன. செய்மதி மூலம் வழங்கப்படும் இணைய சேவையில், தொடர்பு சேவைகள், தகவல் சேவைகள் ஆகிய இருவகைச் சேவைகள் மையப்படுத்தப்பட்டுள்ளன. மின்னியல் தபால், மின்னியல் சஞ்சிகை, மின்னியல் வெளியீடு, டெல்நெட், தொடர் கலந்துரையாடல், உலகின் பரந்த வலை (World Wide Web) போன்ற பல வகையான நிகழ்ச்சித்திட்டங்கள் என்று நாளுக்குநாள் இதன் சேவைப் பரிமாணங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன. இவ்விடத்தில் நவீன தகவல் தொடர்பில் இன்றியமையாத இணையத்தைப் பற்றி சுருக்கமாக நோக்க வேண்டியது அவசியமாகும்.
எதிர்பாராமல் பிறந்த இணையம் என்கிற மகத்தான தகவல் புரட்சியின் விளைவுகள் கூட யாரும் எதிர்பாராததாகவே இருக்கிறது. இணையம் ஒரு வல்லரசின் இராணுவத் தேவைக்காகப் பிறந்தது. அது உலக மயமாகும் சந்தையைப் பின்தொடர்ந்து உலகத்தில் பரவியது. அது தகவல் தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு என்கிற இரு பாரிய தொழில்நுட்பத் தொழில்துறைகளும் கைகோர்த்துக் கொண்டதால் எழுந்தது. ஆரம்பத்தில் இணையத்தின் மூல மொழியாக ஆங்கில மொழியே விளங்கியது. இன்று வலையகத்தில் பல மொழிகள் உள் வாங்கப்பட்டுள்ளது. எனவே இன்று மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம் என்று அது அழைக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இணையம் பெரும்பாலும் அமெரிக்க மூலதனம், அமெரிக்கச் சந்தை, அமெரிக்கக் கலாச்சாரம் செல்லும் வழியில் சென்று கொண்டிருக்கின்றது.. சந்தை முதன்மைப்படுத்தும் கலாசாரங்களுக்கு மாற்றாக, எண்ணற்ற பிற கலாசாரங்களுக்கான பாலமாகவும் இருக்கிறது. அது எதிர்பாராதவர்கள் மத்தியில் புதிய உறவுகளை உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் ஒற்றுமை உடையவர்களை இணைக்க இணையம் போல ஒரு ஊடகம் இதுவரை வாய்த்ததில்லை எனலாம்.
அதே போல நவீன தொலைத்தொடர்பில் செய்மதிகளும் நேரடிப்பங்களிப்பை வழங்குகின்றன. மேற்குலக நாடுகளில் செய்திகளின் மூலம் தகவல் பரிவர்த்தனையை மனிதனால் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது. ‘நெவிகேடர்” மேற்கத்திய நாடுகளில் வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள பாதை வழிகாட்டியாகும். நெவிகேடரில் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை நிரப்பினால் செய்மதியின் துணை கொண்டும் நெவிகேடர் குரல் சமிக்ஞையாக எமக்கு வழியைக் காட்டிக் கொண்டே செல்லும். இவ்வாறாக தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக நவீன இலத்திரனியல் யுகத்தில் மாறிவிட்டது. இந்த தொலைத் தொடர்பு தினத்தில் தொலைத் தொடர்பைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தொலைத் தொடர்புக்கும் மக்களின் அபிவிருத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகளை இனங்காட்டுவதும் முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டாலும்கூட சராசரி மனிதனுக்கு தொலைத் தொடர்பு எத்தகைய முக்கியத்துவமானது என்பதை உணர்த்தலின் ஊடாக இல்லாமலே அவர்களது வாழ்வில் ஒன்றிணைந்துள்ளமையினால் அது இயல்பான ஓர் உணர்வாக மாறிவிடுகின்றது. நீங்கள் இக்கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அறிவியல் வளர்ச்சியின் வழியாகவே நாம் அதைக் கைப்பற்றியிருக்கிறோம் என்பது மிகப்பொருந்தும்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பயன்பாட்டைக் கொண்ட அலைபேசிகள் பேசுவதற்கு மட்டும் என இருந்த நிலை மாறிவிட்டது. தற்போதைய ஸ்மார்ட் அலைபேசிகள் ஒரு கணினியை உள்ளடக்கி வலம் வருகிறது. உள்ளங்கைகளுக்குள் உலகில் நடைபெறும் ஒவ்வொன்றையும் உடனே காண இயல்கிறது. நேரடியாக முகம் பார்த்துப் பேச முடிகிறது. தொலைத் தொடர்பு நுட்பம், தற்போதைய காலத்தின் மின்னணு நுட்ப வளர்ச்சியில், வானில் செயற்கைக்கோள் வழியாகவும் நிகழ்த்தப்படுகிறது. இணையத்தில் பெரும் பயன்பாட்டில் இருப்பது சமூக வலைதளங்களாகும். முகநூல், வலைப்பக்கங்கள், வாயிலாக கண் இமைக்கும் நேரத்தில் தகவல்கள் பதியப்பட்டு ஒட்டு மொத்த உலகிற்கும் கொண்டு சேர்க்கப்படுகின்றது. அன்றாட சமூக நிகழ்வுகள் பிரச்னைகள் சமூக வலைதளங்களால் அணுகப்படுகிறது.
அதேநேரம், தொலைத் தொடர்பின் அபிவிருத்தியானது நவீன காலத்தில் மனிதனின் அழிவுகளுக்குக்கூட பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நவீன தொலைதொடர்பில் செய்தியின் பங்களிப்பு உலகளாவிய நாடுகளை வேவு பார்ப்பதற்கும், நாட்டு இரகசியங்களை அறிவதற்கும் குறிப்பிட்ட வல்லரசுகளின் ஆதிக்கத்தை பேணிக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுவது எதிர்காலத்தில் சில பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமையலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. எவ்வாறாயினும் நவீன மிலேனிய யுகத்தில் வாழும் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றே தொலைதொடர்பு என்பதை கருத்திற் கொள்வோம். எனினும் இத்தகைய தளங்களை எச்சரிக்கையுடன் அணுகுவதும், பதிவுகள் இடுவதும் அவசியம். தனிப்பட்ட பதிவுகள் இடுதலில் விழிப்புணர்வும், பிறர் மனம் புண்படும்படியான கருத்துக்கள் தவிப்பதும், 180 கோடிக்கும் அதிகமான உறுப்பினர் எண்ணிக்கை கொண்டு இயங்கும் சமூக வலைதளங்கள் போன்ற தொலைத்தொடர்பு பகுதிகளின் முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்தும் என்பது உறுதி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.