இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறித்தோபர் கொலம்பசு நினைவு நாள் இன்று (மே 20, 1506).
கிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) அக்டோபர் 1451ல் இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் பிறந்தார். அவருடைய தந்தை டொ மினிகோ கொலம்போ, ஒரு கம்பளித்துணி வியாபாரி. தாய் சுசான்னா போன்டனாரோசா. 1471ல் கொலம்பசு எசுபெனோலா ஃபினான்சியர்சு நடத்திய ஒரு கப்பலில் சேர்ந்தார். அவர் கியோஸ் கியோசு (ஏஜியன் கடல்-இல் உள்ள ஒரு தீவு) பகுதியைச் சுற்றி வந்த அக்கப்பலில் ஒரு வருடம் வேலை செய்தார். சில நாட்கள் நாடு திரும்பிய பின் மறுபடியும் கியோசுப் பகுதியில் மற்றோர் ஆண்டு வேலை செய்தார். 1476ல் கொலம்பசு ஒரு வணிகப் பயணத்தை அட்லாண்டிக் கடலின் மீது மேற்கொண்டார். இந்தக் கப்பல் கேப் ஆஃப் செயின்ட் வின்சென்ட் இன் பிரெஞ்சு பிரைவெட்டீயெர்ஸ்-ஆல் தாக்கப்பட்டது. கொலம்பஸ் கப்பல் எரிந்து போய் அவர் ஆறு மைல்கள் நீந்திக் கரை சேர்ந்தார்.
1477ல் கொலம்பசு லிஸ்பன் நகரில் வாழ்ந்தார். போர்த்துக்கல் கடல் தொடர்பான நடத்தைகளுக்கு ஒரு மையமாக இங்கிலாந்து, அயர்லாந்து, ஐசுலாந்து, மடீயெரா, த அசோர்சு, ஆப்பிரிக்காக்குச் செல்லும் கப்பல்களுடன் விளங்கியது. கொலம்பசின் உடன்பிறந்தார் பார்த்தலோமியோ லிசுபனில் ஒரு வரைபடங்களை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவ்வமயம் இவ்விரு உடன்பிறந்தவர்களும் வரைபடங்கள் வரைபவர்களாகவும், புத்தகங்களைச் சேமிப்பவர்களாகவும் விளங்கினர். கொலம்பசு வணிகக் கடற்பயணியாக போர்ச்சுகீசிய கப்பல்களில் மாறினார். 1477ல் ஐசுலாந்துக்கும், 1478ல் மடியெராவிற்கும் சர்க்கரை வாங்கவும், மேற்கு ஆப்பிரிக்க கடலோரங்களுக்கு 1482லும் 1485லும், போர்ச்சுகீசிய வணிக எல்லையான ஸாவோ ஜார்ஜ் டா மைனா என்ற கினியாக் கரைக்கும் சென்றார்.
எசுப்பானியப் பேரரசின் கத்தோலிக்க பேரரசர்களின் ஆட்சியில் கொலம்பசு நான்கு கடற்பயணங்களை அத்திலாந்திக்கு பெருங்கடலைக் கடந்து மேற்கொண்டுள்ளார். இந்தக் கடற்பயணங்களும் லா எசுப்பானியோலா தீவில் இவர் நிரந்தரக் குடியேற்றம் அமைக்க மேற்கொண்ட முயற்சிகளும் புதிய உலகம் என அழைக்கப்பட்ட அமெரிக்காக்களில் எசுப்பானிய குடியேற்றத்தைத் துவக்கின.
புதிய வணிக வழிகளைக் கண்டறிந்து குடியேற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற மேற்கத்திய பேரரசுவாத போக்கு மற்றும் ஐரோப்பிய இராச்சியங்களிடையேயான பொருளியல்நிலை போட்டியில் கிழக்கத்திய இந்தியாவை எட்ட கொலம்பசு மேற்கில் பயணித்து உலகைச் சுற்றி இந்தியாவை அடைய முன்மொழிந்தார். இதற்கு எசுப்பானிய அரசரின் ஆதரவைப் பெற்ற கொலம்பசு 1492ல் மேற்கில் பயணித்து புதிய உலகத்தை கண்டறிந்தார். பகாமாசு தீவுக்கூட்டங்களில் தாம் பின்னர் சான் சால்வதோர் எனப் பெயரிட்ட தீவில் வந்திறங்கினார். மேலும் மேற்கொண்ட மூன்று கடற்பயணங்களில் கொலம்பசு பெரிய மற்றும் சிறிய அண்டிலிசு தீவுகளையும் வெனிசுவேலா, நடு அமெரிக்காவின் கரிபியக் கடலோரப் பகுதிகளையும் கண்டறிந்து அவற்றை எசுப்பானியப் பேரரசுக்கு உரியதாக உரிமை கோரினார். கொலம்பசு 1492ல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார்.
இவரது கடற்பயணங்களே அமெரிக்காக்களுடனான ஐரோப்பாவின் முதல் நிரந்தர தொடர்பை ஏற்படுத்தியது. இவற்றை அடுத்தே பல நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பியர்களின் நாடுகாணுதல், கைப்பற்றுதல், குடியேற்றவாதம் தொடர்ந்தன. எனவே இவரது கண்டறிதல் தற்கால மேற்கத்திய உலகின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது. இதுவரை ஐரோப்பியர்கள் கண்டறியாத புதிய கண்டத்தை வந்தடைந்துள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ளாத கொலம்பசு இங்கு வாழ்ந்திருந்த மக்களை இன்டியோசு (“இந்தியர்களுக்கான” எசுப்பானியச் சொல்) என்றே அழைத்தார். அமெரிக்காவில் குடியேற்றப்பகுதிகளுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமித்தது தொடர்பான எசுப்பானிய பேரரசருடனான பிணக்கு காரணமாக 1500ல் லா எசுப்பானியோலாவின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னால் நீண்ட வழக்காடலுக்குப் பின்னர் கொலம்பசும் அவரது வாரிசுகளும் கோரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார். கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும். உண்மையாக கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் இல்லை . ஏனென்றால் அங்கே ஏற்கனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார். முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள்,வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும், கொலம்பசின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும்.
தமது கடைசி கடற்பயணத்தின் திரும்பும்வழியில் கடுமையானப் புயலை எதிர்கொண்டார். தொடர்ந்த ஆண்டுகளில் இன்ஃபுளுவென்சா மற்றும் பிற நோய்களால் அவதிப்பட்டார். கீல்வாதத்தின் கடுமையும் கூடியது. இதனால் பல மாதங்களுக்கு படுத்த படுக்கையில் இருந்தாக வேண்டியதாயிற்று. இந்த நோய்களே பதினான்கு ஆண்டுகளில் அவரது மறைவிற்கு காரணமாயின. இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறித்தோபர் கொலம்பசு மே 20, 1506ல் தனது 54வது அகவையில் எசுப்பானியாவிலுள்ள வல்லாடோலிடில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். கொலம்பசின் உடல் முதலில் வல்லாடோலிடில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் லா எசுப்பானியோலாவின் ஆளுநராக இருந்த அவரது மகன் டியாகோவின் உயில்படி செவீயாவின் லா கார்துஜாவிலுள்ள ஓர் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.