விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) பிறந்தநாள் இன்று (மார்ச் 9, 1934).
யூரி காகரின் (யூரி அலெக்ஸேய்விக் காகரின்) மார்ச் 9, 1934ல் கஜட்ஸ்க், குளூசினோ, இரசியாவில் பிறந்தார். அவர் பிறந்த இடமான கஜட்ஸ்க், அவர் மறைந்த பின் ‘ககாரின்’ எனும் அவரது பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை யூரி அலெக்ஸிவிக் ககாரின். மாஸ்கோவில் இருந்து ஒரு நூறு மைல் தொலைவில் இருந்த ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இளைஞனாக இருந்தபோது, காகரின் ஒரு ரஷ்ய யாக் போர் விமானம் தனது வீட்டிற்கு அருகே, அவசரகால தரையிறக்கம் செய்யப்பட்டதை கண்டார். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு, பறக்கும் கிளப் ஒன்றில் சேர வாய்ப்பு வர, அவர் அதை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார். 1955-இல் தனது முதல் தனி விமானத்தை இயக்கினார். அதிலிருந்து சில ஆண்டுகளிலேயே, அவர் ஒரு விண்வெளி வீரராக தன்னை மேம்படுத்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டார். 200-க்கும் மேற்பட்ட இரசிய விமானப்படை போர் விமானிகள் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உயர் அழுத்த நிலைமைகளையும் சமாளிக்கும் அனுபவங்கள் காரணங்களாக கருதப்பட்டன.
அந்த நேரத்தில் 27 வயதான மூத்த லெட்டினன்ட் காகரின், தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகளில் ஒருவராவார். விண்வெளியில் பயணிப்பது, அதில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்டதாக கருதும் இக்காலத்திலும் நாம் எதிர்கொண்டு கொண்டிருக்கும் சிக்கல்களை பார்ப்போம். முதல் சிக்கல் உடற்கூறியல். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக உந்தப்படும் போது ஏற்படும் அழுத்தம் மற்றும் அதிர்வினை தாங்கும் திறன் நம் உடலுக்கு வேண்டும். நிலத்திலிருந்து விண்கலனில் கிளம்பிய சில மணித்துளிகளிலேயே தொழில்நுட்பக்கோளாறுகளால், வெடித்துச்சிதரும் அபாயம். அதைத்தாண்டி விட்டால், நமது வளிமண்டல அடுக்கினை கடக்கும்போது ‘எஸ்கேப் வெளாசிட்டியால்’ ஏற்படும் அழுத்தம், அதையும் சமாளித்துவிட்டால், ‘வேன் ஆலன் ரேடியேஷன் பெல்ட்’ எனும் ஆற்றல்மிக்க துகள் பொருள் கொண்ட புவியின் காந்தப்புல பகுதி, அதன் பின்பு வெற்றிடத்தின் வரவேற்பு என விண்வெளியில் பயணம் மேற்கொள்வது என்பது ஒவ்வொரு நிலையிலும் மறுபிறப்பு எடுப்பதைப்போன்றதாகும்.
ஏப்ரல் 12, 1961 அன்று, மாஸ்கோ நேரத்தில் காலை 9:07 மணிக்கு, ‘வோஸ்டாக் 1’ விண்கலன் சோவியத் ஏவு தளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது. உந்து விசையின் காரணமாக ஏற்படும் எடை இழப்பு ஒரு பைலட்டை எவ்வாறு பாதிக்கப் போகிறது, அதாவது விமானியால் அந்த அளவு அதிர்வு மற்றும் அழுத்தத்தில் விண்கலனை சரியாக கட்டுப்படுத்த முடியுமா? என்பது எவருக்கும் உறுதியாக தெரியாது என்பதால், விண்கலனில் அவர் இருந்த கோள வடிவ உறையினுள், தானாக இயங்கும்படி அல்லது தரைக்கட்டுப்பாட்டுத்தளம் நிலத்திலிருந்தே இயக்கும்படியாக அந்த விண்கலன் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை விண்கலன் செல்லும்போது ஏதேனும் தவறு நேர்ந்தால், காகரின் விண்கலனை அவர் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர, தரைக்கட்டுப்பாட்டுத் தளத்திலிருந்து, தானியக்கத்தினை ரத்துசெய்யும் குறியீட்டை(Override Code) பெற அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், சோவியத் விண்வெளி திட்டத்தின் அப்போதைய தலைமை வடிவமைப்பாளர் ‘செர்கி கொரோலெவ்’ விதிமுறைகளை மீறி, காகரினிடம் அவர் விண்கலனில் ஏறும் முன்னரே அந்த குறியீட்டை கொடுத்திருந்தார். ஒருவேளை, எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு, சுற்றுவட்டப்பாதையில் இயற்கையாக அது சுற்ற ஆரம்பிக்க எடுக்கும் காலம் வரை காத்திருக்கும் நிலை வந்தால், காகரினுக்கு 10 நாட்களுக்கு தேவைப்படும் உணவு மற்றும் நீர் போன்றவையும் அக்கலனில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பொருட்கள் காகரினுக்கு தேவைப்படவில்லை.
108 நிமிடங்களில், ‘வஸ்டோக் 1’ பூமியைச் ஒரு முழு சுற்று சுற்றியிருந்ததோடு, அதிகபட்சமாக புவியிலிருந்து சுமார் 203 மைல்கள் (327 கிலோமீட்டர்) உயரத்தை அடைந்திருந்தது. ககாரின் பூமிக்கு திரும்ப, புவியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்போது, கூடுமான வரையில் சுயநினைவுடன் இருக்க முற்பட்டார். அப்போது, புவி ஈர்ப்பு விசையின் இழுவிசையானது, எட்டுமடங்கு அங்கே அதிகமாக இருப்பதை உணர்ந்தார். மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, விண்கலன் மெதுவாக இயக்கப்பட தேவைப்படும் எஞ்சின்களோ, பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட எந்த வழிமுறையினையோ ‘வோஸ்டாக் 1’ விண்கலன் கொண்டிருக்கவில்லை. தரையிலிருந்து 7 கி.மீ உயரத்தில், விண்கலனிலிருந்து வெளியேறி, காகரின் பாராச்சூட் மூலம் தரையிறங்கினார். ஃபெடெரேஷன் ஏரோநாட்டிக் இன்டர்நேஷனல்(FAI – Fédération Aéronautique Internationale) விண்வெளிவீரர், விண்கலத்துடன் தரையிறங்கினால்தான் அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட விண்வெளிப்பயணமாக கருதமுடியும் எனும் விதிமுறைகளைக் கொண்டிருந்தது. சோவியத்தின் தலைவர்கள் 1971 வரை காகரின் விண்கலனுடன் தரையிறங்கியதாகவே அறிவித்திருந்தனர். எது எப்படியாயினும், புவியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து விடுபட்டு, விண்வெளியில் பயணம் செய்த முதல் நபர் காகரின் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
காகரின், விண்வெளியிலிருந்து திரும்பியதும் உலகமே கொண்டாடும் நாயகனாக புகழ்பெற்றார். அவரை, நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடனும் மகிழ்ச்சியுடனும் மாஸ்க்கோவின் ரெட் ஸ்கொயர் இடத்தில் வரவேற்றனர். சோவியத்தின் இந்த சாதனையை உலகமறிய, காகரின் உலகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் இரசியா திரும்பியதும், மிகப்பெரும் பதவியான, சோவியத் யூனியனின் துணை உச்ச சோவியத் பதவி வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. விண்வெளிவீரர்கள் பிரிவின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பொதுமக்களிடையே நன்கு அறியப்பட்ட ஒருவராக காகரின் இருந்தமையால், அவர் உயிர் மிகவும் முக்கியம் எனக்கருதிய சோவியத் அரசு, அவரை மீண்டும் விண்வெளிக்கு அனுப்புவதை விரும்பவில்லை. ஆனால், அவர் விமானப்படையில் சோதனை விமானங்களை உருவாக்கும் பணியையும் செய்துகொண்டிருந்தார்.
ககாரின் விண்வெளிப் பயணம் செய்த 12 ஏப்ரல் தேதி, ஒரு சிறப்பு தேதியாக நினைவுகூரப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு முதல் இந்தத் நாள் சோவியத் ஒன்றியத்திலும் பின்னர் ரஷ்யாவிலும் மற்றும் பிற சோவியத் ஒன்றியத்தில்லிருந்து பிரிந்து சென்ற சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதன் விண்வெளி விமானத்தில் பயணம் செயத சர்வதேச தினமாக அறிவிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு முதல், யூரி இரவு என்று ஒரு சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது, ஒவ்வொரு ஏப்ரல் 12 ம் தேதி விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் கடந்த நாளாக நினைவுகூரப்படுகிறது. பூமியில் பல கட்டிடங்கள் மற்றும் இதர தளங்கள் ககாரின் பெயரில் பெயரிடப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டில் நட்சத்திர நகரத்தில் உள்ள விண்வெளி வீரர்களின் பயிற்சி மையம் ககாரின் பெயரால் பெயரிடப்பட்டது. பைக்கானூர் விண்கலம் ஏவுதளம் ககாரின் பெயரால் ககாரின் துவக்கம் என்று அழைக்கப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் உக்ரைன்னில் உள்ள செவஸ்டோபல் நகரத்தின் பெயர் ககாரின் ஞாபகமாக பெயரிடப்பட்டது. விமானப்படை அகாடமி (கழகம்) 1968 ஆம் ஆண்டில் ககாரின் விமானப்படை அகாடமி என மறுபெயரிடப்பட்டது.
ககாரின்னை போற்றும் விதமாக விண்வெளி வீரர்களாலும், வானியலாளர்களாலும் அவரது பெயர் நிலவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கிற்கு வைக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவிற்குப் பயண்ம் செயத விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் ஆகியோரும் மற்றும் சக விண்வெளி வீரர்ரான விளாடிமிர் கொமரொவ் ககாரினின் நினைவாக பதக்கங்களை கொண்ட ஒரு நினைவு பையை நிலவின் மேற்பரப்பில் விட்டு சென்றுள்ளனர். 1971 ஆம் ஆண்டில், அப்போலோ 15 விண்கல விண்வெளி வீரர்கள் டேவிட் ஸ்காட் மற்றும் ஜேம்ஸ் இர்வின் மறைந்த விண்வெளி வீரர்களின் பட்டியலை தாங்கள் தரையிறங்கும் இடத்தில் விட்டுச் சென்றனர். இந்தப் பட்டியலில் அனைத்து அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் சோவியத் விண்வெளி வீரர்கள் விண்வெளி பந்தயத்தில் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளது. இதில் யூரி ககாரின் 14வது நபராக பட்டியலிடப்பட்டார்.
ககாரின்னை போற்றும் விதமாக அவரது உருவச் சிலைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று 2011 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள அட்மிரால்டி வளைவு அருகில் (இப்போது கிரீன்விச்சு), இலண்டன் வர்த்தக மையத்தில் இறுதியில் யூரி ககாரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. 2012 இல், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் இல் உள்ள தெற்கு வேய்சைட் டிரைவில் நாசாவின் அசல் விண்வெளி தலைமையகத்தின் தளத்தில் ஒரு சிலை திறக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் கலைஞர் மற்றும் விண்வெளி வீரர்ரான அலெக்ஸ்சி லியோனோவ் ஆல் செய்யப்பட்ட சிற்பம் ஹூஸ்டனுக்கு பல்வேறு ரஷ்ய அமைப்புகளால் வழங்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் ஹூஸ்டன் மேயர் அன்னிசி பார்கர் , நாசா நிர்வாகி சார்லஸ் போல்ன் மற்றும் ரஷ்ய தூதர் செர்ஜி சியோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மார்ச் 27, 1968, MiG-15 எனும் ஜெட் போர் விமானத்தினை சோதனை ஓட்டம் செய்யும்போது, சக விமானியான விளாடிமிர் செர்யோகின் எனும் ஒருவருடன் சேர்ந்து காகரின் உயிரிழந்தார். அந்த சமயத்தில், அவருக்கு இரு குழந்தைகள் இருந்தன. பறவை அல்லது வேறு ஏதோ ஒன்றின் மீது மோதலினை தவிர்க்கும் பொருட்டு, திடீரென விமானத்தினை தவறுதலாக இயக்க, ஜெட் விமானம் தரையில் மோதி விபத்திற்குள்ளானதாக, விபத்தினை விசாரித்த ஸ்டேட் கமிஷன் அப்போது கூறியது. புகழின் உச்சிக்கு சென்ற ஏழே ஆண்டுகளில், தான் இறக்கவிருப்பதை காகரின் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். இந்த கால மனித இனம் உள்ள வரை அவரது சாதனை என்றும் நினைவுபடுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்,
நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.