

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லிக்குச் செல்கிறார்.
சில தினங்களுக்கு முன் நீட் மசோதா தொடர்பான அறிக்கையை குடியரசு தலைவருக்கு அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாயின. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா விவகாரத்தில், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்தன. ஆளுநருடன் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்மீக பயணம் மேற்கொண்டார் அப்போது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில கட்சியினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், ஆளுநர் இன்று (ஏப்ரல் 20) காலை 10.30 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு, குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அங்கு தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.
நீட் மசோதா தொடர்பான அறிக்கையை அவர் தயாரித்துள்ளதாகவும், அதை மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. எனவே, ஆளுநரின் பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

