ஏப்.24-ல்ஒருநாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகிறார். அரசு நிகழ்வுகள், மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா உட்பட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
காலை 9.30 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். அவரை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு உயரதிகாரிகள் வரவேற்கின்றனர்.
புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து மதிய உணவிற்கு பிறகு கம்பன் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல திட்டங்களை துவக்கி வைக்கிறார். கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் இந்திரா காந்தி சிலையருகே உள்ள புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருகிறார். அங்கு எம்எல்ஏக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்று டெல்லி புறப்படுகிறார்.
இவ்வாறு மத்தியஅமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி ஒருநாள் பயணத்திட்டம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமித் ஷா வருகை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அரசு துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் கம்பன் கலையரங்கில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு சப்-கலெக்டர் ரிஷிதா குப்தா தலைமை வகித்தார். இதில் புலனாய்வுத்துறை, காவல்துறை, போக்குவரத்து பிரிவு, உட்பட 22 துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஏப்.24-ல் அமித் ஷா புதுச்சேரி வருகை
