தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அவர்கள் பேசியபோது, சென்னையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
முக்கியமாக பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என பிரித்து வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தாலோ, அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடித்தாலோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மேலும் பேருந்து, ரெயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டும் 382 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.