தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செம்பரம்பாக்கம் ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் படர்ந்து உள்ளதை பார்த்த அவர், நீர் வரத்து மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்கள் முழுவதுமாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் எனவும், ஆகாயத்தாமரைகள் மற்றும் செடிகளை உடனடியாக சுத்தம் செய்யவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியில் நீரில் பரந்து கிடக்கும் ஆகாயத்தாமரை மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்களில் உள்ள செடிகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மதகுகளின் அருகே தேங்கியுள்ள ஆகாயத்தாமரை செடிகளை, மிதவை படகு மூலம் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த முறை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது ஏரியில் ஐந்து கண் மதகுகளில் உள்ள ஷட்டர்களில் செடிகள் அதிகளவில் சிக்கி அதனை வெளியேற்றுவது கடும் சிரமமாக இருந்து வந்தது. எனவே, திருமுடிவாக்கம் மற்றும் வழுதலம்பேடு ஆகிய பகுதிகளில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் மழைநீர் கால்வாய்களிலும் உள்ள செடி, கொடிகளை அகற்றும் பணியில் 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.