• Fri. Apr 26th, 2024

111 கோயில்களின் முப்பரிமாணக் காட்சிகள்…

Byகாயத்ரி

Nov 22, 2021

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் உள்ளன.

இக்கோயில்களுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே, பக்தர்கள் வசதிக்காக பூஜைகளை முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்வது, இ-உண்டியலில் காணிக்கை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறநிலையத் துறையின் இணையதளத்தில் உள்ளன.


இதுமட்டுமின்றி, கோயில்களின் புகைப்படங்களை முப்பரிமாண காட்சி மூலம் பக்தர்கள் பார்க்கும் வசதி, கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு முன்பு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 77 கோயில்களின் முப்பரிமாண காட்சியை இணையதளத்தில் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இப்பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டிருந்தது.

தற்போது, மீண்டும் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. தற்போது வரை தமிழகம் முழுவதும் உள்ள 111 கோயில்களின் முப்பரிமாணக் காட்சிகளை இணையதளத்தில் (https://hrce.tn.gov.in) பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘முப்பரிமாண காட்சி மூலம் பார்க்கும்போது கோயிலை சுற்றிப் பார்க்கும் உணர்வு பக்தர்களுக்கு ஏற்படும். தற்போது 111 கோயில்களுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது, படிப்படியாக அனைத்து முக்கிய கோயில்களுக்கும் விரிவு படுத்தப்படும்’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *