குண்டும், குழியுமாக மாட்டு வண்டிச் சாலையாக காட்சியளிக்கும் தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கருவேல் நாயக்கன்பட்டி ஊர் உள்ளது. வாகனப் போக்கு அதிகரிப்பால் இந்த ஊரை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலை அடிக்கடி சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழைக் காலங்களில் ரோட்டில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும். இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் ‘மெகா சைஸ்’ பள்ளங்களில் சிக்கி பரிதவிப்பதும் அன்றாட நிகழ்வாக உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் பாடு திண்டாட்டம் தான். அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் நடந்து வருகிறது. ரோட்டின் பரிதாப நிலை குறித்து தேனி மாவட்ட தன்னார்வலர்கள் சார்பில் கலெக்டரிடம் இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லை என புலம்பி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ், ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையின் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டியதோடு, தேசிய நெடுஞ்சாலையா அல்லது கிராமப்புற மாட்டு வண்டி சாலையா என புகார் தெரிவித்துள்ளார். மேலும் இதையே மனுவாக ஏற்று, சம்மந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குண்டும், குழியுமான ரோட்டை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இப்பிரச்னை பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்வோம், என எச்சரிக்கை விடுத்துள்ளார்.