

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் நியாயவிலை கடை இயங்கி வருகிறது. இங்கு சீனிவாசபுரம், உகார்தே நகர், ஏடிசியூ நகர், கார் மேல் புறம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு இந்த நியாய விலை கடையில் இருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கடைக்கு அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரியில் இருந்து கடைக்கு அரிசி மூடைகளை இறக்கும் போது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிக குறைவான அளவில் அரிசி மூடைகள் இருந்துள்ளது. மேலும் இங்கு கொண்டு வரப்பட்ட அனைத்து அரிசி மூடைகளிலும் துவாரம் ஏற்பட்டு அரிசிகள் ஆங்காங்கே சாலைகளிலும், லாரியிலும் சிதறி கிடந்துள்ளது. அதே போல ஒவ்வொரு அரிசி மூடையிலும் உள்ள துவாரங்களில் பேப்பர்களை வைத்து துவாரங்களை அடைக்கப்பட்ட பிறகு அரிசி மூடைகளை கடைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் நியாயவிலை கடை ஊழியர் அதிர்ச்சியடைந்து லாரி ஓட்டுனரிடம் கேட்டபோது இது சம்மந்தமாக என்னிடம் கேட்கக்கூடாது என லாரி ஓட்டுனர் வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது தவறு நடந்து விட்டதாகவும் குறைந்து காணப்பட்ட அரிசி மூடைகளை கணக்கெடுத்து மீண்டும் அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு வேளை சாப்பாடுக்கே அவதிபட்டுவரும் இந்த காலத்தில் இது போல அரிசி மூடைகளை அலட்சியமாக நியாயவிலை கடைகளுக்கு அனுப்பி வைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


