ஒமைக்ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பல அடக்கு உருமாற்றம் அடைந்துள்ள புதிய வகை கொரோனா கிருமியான ஒமைக்ரான், பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் நுண்ணுயிரியின் ஆபத்தான தன்மை குறித்து தகவல் எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஒமைக்ரான் கொரோனா பரவல் தங்கள் நாடுகளுக்குள் நுழையாமல் இருக்க பிரிட்டன், ஜெர்மனி, இஸ்ரேல், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தென்னாப்பிரிக்கா உடனான போக்குவரத்தை நிறுத்திவிட்டன.
இந்த வைரஸ் மிகவும் அபாயகரமானது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதால், பல்வேறு கட்டுப்பாடுகளில் அதிக அக்கறை காட்டி வருகின்றன.இதனால் பிரிட்டன், அமெரிக்கா நாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், தென்னாப்பிரிக்க விமான நிலையங்களில் செய்வதறியாது தவித்து வருகின்றன. இந்த சூழலில் பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி டெல்லியில் இருந்து கனடாவின் டொரன்டோ நகருக்கு இதுவரை இருந்த குறைந்தபட்ச கட்டணம் 80,000 ரூபாயில் இருந்து 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் இருந்து லண்டனுக்கு இதுவரை 60,000 ரூபாயாக இருந்த பயண கட்டணம், 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிசினஸ் வகுப்பு டிக்கெட்டுகள் ரூ.6 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு நகரங்களுக்கு இடையிலான விமான கட்டணம் 2 முதல் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வு விமான பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.