2017ம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து உலகெங்கும் நடந்த போராட்டத்தை நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனம் ‘மெரினா புரட்சி’ என்ற ஆவணத்திரைப்படமாக தயாரித்திருந்தனர். M.S.ராஜ் இயக்கியிருந்தார். கடும் போராட்டத்திற்குப் பிறகு தணிக்கை பெற்ற ‘மெரினா புரட்சி’ நார்வே, கொரிய திரைப்பட விழாக்களில் விருது பெற்றது.
தற்போது நாச்சியாள் பிலிம்ஸும் தருவை டாக்கீஸும் இணைந்து 2018 மே மாதம் 22 & 23 தேதிகளில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை PEARLCITY MASSACRE (முத்துநகர் படுகொலை) என்ற பெயரில் ஆவணப்படமாக தயாரித்துள்ளனர். மெரினா புரட்சியை இயக்கிய M.S.ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இது குறித்து இயக்குனர் கூறுகையில், “PEARLCITY MASSACRE(முத்துநகர் படுகொலை) புலனாய்வு ஆவணத்திரைப்படம் உண்மையில் மே22 & 23 தேதியில் நடந்த கொடூர சம்பவங்களை சாட்சியங்களுடன் பதிவு செய்திருக்கிறது.
துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த ஆவணப்படத்தை திரையிட்டோம். வழியும் கண்ணீரை துடைத்தபடியே படத்தை பாராட்டியவர்கள் விரைவில் நீதி வழங்க வேண்டும் என்று கோரி கையெழுத்திட்டனர் என நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.