மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சொத்து வரி குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல் அதிகபட்சமாக 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், “மத்திய அரசின் நிபந்தனை காரணமாகவே வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டது” என, தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சொத்து வரி உயர்வை மார்ச் 31-ம் தேதிக்குள் மேற்கொள்ளவில்லை என்றால் மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய சுமார் ரூ.15,000 கோடி நிதியை வழங்க மாட்டோம் என நிர்பந்தம் கொடுத்தது. குறிப்பாக, வரியை உயர்த்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி கிடைக்காது என மத்திய அரசு கூறியது. எனவே, மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், தமிழகத்தில் கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் தேவையை பூர்த்தி செய்ய சொத்து வரி உயர்வு அவசியம்.
ஆனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படாத வகையிலேயே வரி உயர்த்தப்பட்டுள்ளது” என கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.