பாமக செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு அரசு வழங்கியது செல்லாது, அதேசமயம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்க முடிவு செய்வதற்காக பாமகவின் அவசர செயற்குழு கூட்டம் நாளை காலை 11 மணி அளவில் சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெறுகிறது.
அந்தக் கூட்டம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும். இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.