• Sat. Oct 5th, 2024

வரம்பு மீறிய காட்சிகளுக்குள் ஈடுபடுத்தினால் போக்சோ பாயும்- ஸ்மிருதி இரானி

Byகாயத்ரி

Apr 2, 2022

திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை திமுக குழுத் துணைத் தலைவருமான கனிமொழி மக்களவையில் பேசினார்.

அப்போது அவர், “இணைய தொடர்கள், திரைப்படங்கள் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் பல பெண் குழந்தைகளும் நடிக்கின்றனர்.அவர்களில் பலர், எடுக்கப்படும் காட்சி பற்றிய புரிதல் இல்லாமலேயே நிர்வாணம் உள்ளிட்ட சில வரம்பு மீறிய காட்சிகளில் நடிக்க வைக்க கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.
இந்நிலையில், குழந்தைகளை நடிக்க வைக்கும் போது தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் தெளிவான வரையறையுடன் கூடிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதா?
ஏனென்றால், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கான பாதுகாப்பு குறித்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு தெளிவான ஆலோசனை வழங்கி இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு விளக்கம் அளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும்போது, “பெண் குழந்தைகளை நிர்வாணக் காட்சிகள் உள்ளிட்ட வரம்பு மீறிய காட்சிகளில் நடிக்க வைத்தல் என்பது போக்சோ சட்டத்தின்படி குற்றம் என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.இதுபோன்ற காட்சிகளை பரப்புதலும் தடை செய்யப்பட்டது என்றும் போக்சோ சட்டத்தில் கொண்டு வரக் கூடியது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து இவற்றைத் தடுக்க உறுதி பூண்டுள்ளது. இதுபற்றிய ஆலோசனைகள் என்பதைத் தாண்டி நாங்கள் ஊடக நிறுவனங்களுடன் இது தொடர்பாக தொடர்ந்து உரையாடி வருகிறோம். பெண் குழந்தைகளை வரம்பு மீறிய காட்சிகளுக்குள் ஈடுபடுத்தினால் எந்தவிதமான பாரபட்சமும் பார்க்கப்படாது. அவர்கள் மீது போக்சோ சட்டம் பயன்படுத்தப்படும் என்பதை அரசியல் வேறுபாடுகள் இன்றி இந்த அவையில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *