• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.,

BySeenu

Aug 29, 2025

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி பிரதான கூட்ட அரங்கான விக்டோரியா அரங்கில் நடைபெற்ற நிலையில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து குப்பைகள் கொண்டு வந்து கொட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் வெள்ளலூர் குப்பை கிடங்கை வைத்து மாநகராட்சி நிர்வாகம் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுவதாகவும் கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள், கூட்டம் நடைபெற்ற விக்டோரியா ஹால் முன்பாக கையில் பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவை மாநகராட்சி மாமன்ற மாதாந்திர சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் விக்டோரியா ஹால் அரங்கில் நடைபெற்றது. இதில் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்காக ஒப்பந்தப்புள்ளி கோருவது, வாகன நிறுத்துமிடம் அமைத்தல் உள்ளிட்டவை தொடர்பாக 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கூட்டம் நடைபெற்ற விக்டோரியா ஹால் முன்பாக அதிமுக மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் மற்றும் அதிமுக உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வெள்ளலூர் குப்பை கிடங்கு மூலம் மாநகராட்சி நிர்வாகம் பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக கூறி கையில் பதாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஏற்கனவே வெள்ளலூர் குப்பை கிடங்கால் மிகப்பெரிய சுகாதார கேடு ஏற்பட்டுள்ள சூழலில் தற்போது திருப்பூரில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் அப்படி கொண்டு வந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்து அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர்.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டபோது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தேநீர் செலவு 24 லட்சம் ரூபாய் கணக்கு காட்டியதாகவும் பல கோடி ரூபாய் வெள்ளலூர் குப்பை கிடங்கை வைத்து ஊழல் நடைபெற்ற நிலையில் அது குறித்து தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதேபோல் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டதாகவும் சாலைகள் சீரமைக்கப்பட்டதாகவும் கூறியதுடன் கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சி காலத்தில் எந்தவித மேம்பாட்டு பணிகளும் நிறைவேறவில்லை என்றும் மாநகராட்சி மேயர் நான்கரை ஆண்டுகளில் கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.