
கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று தினங்களுக்கு கருப்பாயி கோவில் தெரு அருகே உள்ள வஉசி தெரு, மாரியம்மன் கோவில் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டி கரூர் நகர காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். இந்த கடிதத்திற்கு உரிய துறை சார்பில் அனுமதி பெற்று நடத்தும் பட்சத்தில் ஆட்சேபனை இல்லை என கரூர் நகர காவல் ஆய்வாளர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் அன்னதான நிகழ்ச்சி நடத்துவதற்கான பந்தல் அமைக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, காவலர்கள் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கரூர் நகர காவல் நிலையத்தில் அன்னதான நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கரூர் நகர காவல் நிலையத்தில் திரண்டுள்ளனர்.
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் சார்பாக அன்னதான நிகழ்ச்சி நடத்துவதற்கு பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தவெக சார்பில் நிகழ்ச்சி நடத்துவதற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகவும், அனுமதி வேண்டி காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தனர். அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
