• Sat. Apr 20th, 2024

’மஞ்சப்பைக்கு’ மாறும் தமிழகம்- அரசின் புதிய முயற்சி

Byமதி

Nov 29, 2021

பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகள் உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதால், அவற்றின் பயன்பாட்டை குறைக்க உலக நாடுகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. இந்தியாவில் 2019 – 20ல் மட்டும் ஏறத்தாழ 35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்துள்ளன. தமிழகத்தில் ஏறத்தாழ 4 லட்சம் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்ததாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் அதிக ஆபத்துகள் ஏற்படுவதால், அதனை தமிழக அரசு முழுமையாக தடை செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இதற்கான அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை பிறப்பித்துள்ளது. மீறுவோருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரையும், தொடர்ந்து அதே தவறை செய்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பு முறையாக செயல்படுத்தப்படாததால் மெல்ல மெல்ல ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. இதனை முழுமையாக கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு புது இயக்கம் ஒன்றை தொடங்கவுள்ளது.

‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற புதிய இயக்கத்தின் மூலம் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலும் ஒழித்து, மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கிராம ஊராட்சி அளவில் இது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள முடிவெடுத்துள்ள தமிழக அரசு. ஜெர்மன் நாட்டு அமைப்புடன் இணைந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை அன்றாடம் பயன்படுத்துவது குறித்து அடையாளம் காணப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. தமிழக அரசின் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் பள்ளிக் கல்லூரி மாணவர்களும் பங்கெடுக்க உள்ளனர்.

அரசின் இந்தத் திட்டம் கைகொடுக்கும் என்றால், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு வெகுவாக குறையும். இருப்பினும் இந்த திட்டம் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் மக்கள் கைகளில்தான் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *