• Fri. Apr 18th, 2025

அனில்ஜெயின் தலைமையிலான மேற்பார்வை குழு இன்று பெரியாறு அணையில் ஆய்வு

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையிலான மேற்பார்வை குழு இன்று பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு தேசிய அளவிலான நிபுனர் குழுவை அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த மற்றும் தீபங்கர்தத்தா ஆகியோர் உதிதரவிட்டதை தொடர்ந்து, மத்திய நீர்வளத்துறை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையில் ஏழுபேர் கொண்ட புதிய மேற்பார்வை குழுவை நியமித்தது. இந்த குழுவில் தமிழகம் சார்பாக, தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, தொழில்நுட்ப நிபுனர் ஆர்.சுப்ரமணியன், கேரள அரசு சார்பாக கேரள அரசின் கூடுதல் தலைமை செயலர் டிங்கு பிஸ்வால், கேரள நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் ஆர்.பிரியேஷ், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய ஆராய்ச்சியாளர் விவேக் திரிபாதி, பெங்களுரில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆனந்த் ராமசாமி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அன்று, பெரியாறு அணை விவகாரத்தில் புதிய மேற்பார்வை குழு, பெரியாறு அணையை ஆய்வு செய்து நான்கு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து இக்குழுவினர் இன்று பெரியாறு அணையில் ஆய்வுசெய்தனர். குழுவில் உள்ள ஆனந்த் ராமசாமி தவிர மற்ற அனைவரும் ஆய்வில் கலந்து கொண்டனர். இவர்களுடன் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய பேரழிவு மற்றும் பின்னடைவு பிரிவு இயக்குநர் ராகுல் குமார்சிங், உதவி இயக்குநர் விபோர்பஹேல், தென் மண்டல இயக்குநர் சென்னை கிரிதரன் ஆய்வில் கலந்து கொண்டனர். இவர்கள் தேக்கடி படகுத்துறையிலிருந்து நீர்வழிப்பாதையில் படகுமுலம் அணைப்பகுதிக்குச் சென்றனர்.

தேக்கடி படகுத்துறையிலிருந்து அணைக்கு கிளம்பிச்சென்ற குழுவினர் பெரியாறு அணையின் மெயின் அணை, பேபிடேம், எர்த்டேம் மற்றும் பேபிடேமை பலப்படுத்த தடையாக உள்ள மரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர் பெரியாறு அணையின் மேற்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சீமோஸ்கிராப் நிலநடுக்க, நில அதிர்வு கருவிகளின் இயக்கங்களையும் ஆய்வு செய்தனர். அணையின் 13 மதகுகளில் ஆர்&3 வது (ரேடியல்) மதகை இயக்கிப்பார்த்தனர். மதகின் இயக்கம் சீராக இருந்தது. இதையடுத்து அணையின் கேலரிப்பகுதியில் சீப்பேஜ் வாட்டடர் (கசிவுநீர்) அளவை சரிபார்த்தனர். கசிவுநீர் நிமிடத்திற்கு 16 லிட்டர் அளவில் இருந்தது, இது இன்றைய நீர்மட்டம் 113.25 அடிக்கு மிகத்துல்லியமாக இருந்தது.

சுமார் நான்குமணி நேர ஆய்வுக்குப்பின் மேற்பார்வை குழுவினர் அணைப் பகுதியிலிருந்து வல்லக்கடவு வனப்பகுதி வழியாக வாகனங்களில் தேக்கடி திரும்பினர். வரும் வழியில் தமிழக அரசின் கோரிக்கையாக உள்ள செப்பனிட வேண்டிய வல்லக்கடவு வனப்பாதையையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து மாலை 3 மணிக்கு தேக்கடியிலுள்ள ராஜீவ்காந்தி நினைவு வனவிலங்கு சரணாலய கூட்ட அரங்கில் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வில் பெரியாறு அணை சிறப்புக்கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், உதவிசெயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், நவீன்குமார், ஆகாஷ் உடபட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவுகள் உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.