ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மாணவர்களிடம் சொன்னார், கெட்டவர்களுடன் சேர்ந்தால், நல்லவர்களும் கெட்டுப் போவார்கள் என்று. எனவே, ‘சேரும் இடத்தைப் பொறுத்துத்தான் நீ’ என்றார். அதற்கு, ஒரு மாணவன் எழுந்து சந்தேகம் கேட்டான். கெட்டவர் ஒருவரைத் திருத்த, நல்லவர் ஒருவர் அவர்களுடன் சேரலாமே என்றான்.
அதற்கு, ஆசிரியர் ஒரு சோதனையின் மூலம் உங்களுக்குப் பதில் தருகிறேன் என்று கூறி, ஒரு பாத்திரம், பால், தண்ணீர் மூன்றையும் கொண்டுவரச் சொன்னார். அந்தப் பாத்திரத்திலே 99 சதவீதம் தண்ணீரையும், 1 சதவீதம் பாலையும் விட்டார். அந்தப் பால் தண்ணீருடன் கலந்து காணாமல் போய் விட்டது. ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, மாணவர்களே இதில் இருந்து என்ன தெரிகிறது என்று கேட்டார். கெட்டவர்களோடு நல்லவர் சேர்ந்தால் அவரும் கெட்டவராக மாறிவிடுவார்.
மறுபடியும் அந்தப் பாத்திரத்தில் உள்ளதைக் கொட்டிவிட்டு, 99சதவீதம் பாலையும், 1சதவீதம் தண்ணீரையும் விட்டார். அந்த 1 சதவீதம் தண்ணீரும், பாலுடன் கலந்து காணாமல் போய் விட்டது. ஆசிரியர் சொன்னார், மாணவர்களே, இதில் இருந்து இன்னொன்றும் நமக்குத் தெரிகிறது என்று. நல்லவர்களோடு ஒரு கெட்டவர் சேர்ந்தால், அவரும் நல்லவர் ஆக மாறிவிடுவார்.
இதுதான் நம்முடைய “சேர்க்கையின் வலிமை” என்று சொல்லி, ஆசிரியர் பாடத்தை முடித்தார். எனவே, நமது சேர்க்கையைப் பொறுத்துத்தான் நாம் நல்லவராவதும், கெட்டவராவதும் அமைகிறது.
சேர்க்கையின் வலிமை
