• Thu. Apr 25th, 2024

வனத்துறை அதிகாரியிடமே விலை கேட்டு மாட்டிக் கொண்ட கடத்தல்காரர்கள்!

தேனி மாவட்டத்தில் யானைத் தந்தங்கள் கடத்தல் கும்பல், முன்னாள் வனத்துறை அதிகாரியிடம் விலை கேட்டு மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தடுக்க வந்த வனத்துறை அதிகாரியை அக்கும்பல் சரமாரியாக தாக்கியதைத் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம்- வத்தலக்குண்டு ரோட்டில் யானை தந்தங்களுடன் ஒரு கும்பல் கடத்தலில் ஈடுபடப் போவதாக தேவதானப்பட்டி வனத்துறையினருக்கு நேற்று (ஜன.23) ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர் டேவிட்ராஜ் மற்றும் பெரும்பள்ளம் வனத்துறை அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் 3 குழுக்களாக பிரிந்து மாவட்ட எல்லையோர பகுதிகளில் கண்காணித்து வந்தனர்.

அப்போது ஒரு கும்பல் சாக்கு மூடைகளுடன் சந்தேகப்படும்படியாக வந்து கொண்டிருந்தது. அவர்களை தடுத்து நிறுத்திய வனத்துறை அதிகாரிகளிடமே, யானை தந்தங்கள் தற்போது எத்தனை லட்சத்திற்கு விலை போகும் என எதார்த்தமாக கேட்டுள்ளனர். உடனே, அவர்களை பிடித்து மூடையை திறந்து சோதனை செய்ததில், உள்ளே யானை தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அக்கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்ய முற்பட்டபோது, பெரும்பள்ளத்தை சேர்ந்த வனச்சரகர் கருப்பையா என்பவரை கீழே தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யானை தந்தங்களை கடத்த முயன்றதாக, தேவதானப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (30), பிரகாஷ் (29), பாக்கியராஜ் (30), முத்தையா (57) மற்றும் உசிலம்பட்டியை சேர்ந்த சின்னராசு (29), சிவக்குமார் (42), தேனியை சேர்ந்த சரத்குமார் (30), விஜயக்குமார் (60), வத்தலக்குண்டுவை சேர்ந்த அப்துல்லா (30) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

யானை தந்தங்கள் இவர்கள் கையில் எப்படி கிடைத்தது. இவர்களின் பின்னணியில் இருந்து இயக்கியது, வனத்துறை உயரதிகாரிகளா? அல்லது அரசியல்வாதிகளா என்ற கோணத்தில் தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கடத்தல் தொடர்பாக தப்பியோடிய சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *