மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து செக்கானூரணி செல்லும் பயணிகள் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நிலையில் நேற்று இரவு பேருந்து நிலையம் வரவேண்டிய கடைசி பேருந்து வராததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். சோழவந்தான் பேருந்து நிலையம் முறையாக செயல்படாத காரணத்தால் பல பேருந்துகள் பேருந்து நிலையம் வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக போக்குவரத்து பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் திருமங்கலத்தில் இருந்து சோழவந்தான் வந்து கடைசி பேருந்தாக செக்கானூரணி செல்ல வேண்டிய பேருந்து சோழவந்தான் பேருந்து நிலையம் வராமல் பாதி வழியில் திரும்பிச் சென்றதால் செக்கானூரணி சென்று அங்கிருந்து திருமங்கலம் விருதுநகர் உசிலம்பட்டி தேனி ஆகிய தொலைதூரங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் காத்திருந்த அவலம் அரங்கேறியது இது குறித்து அங்கிருந்த பயணிகள் கூறுகையில்.., செக்கானூரணி செல்ல வேண்டிய கடைசி பேருந்து வராததால் மதுரை சென்று அங்கிருந்து செக்கானூரணி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 15 கிலோமீட்டர் தூரம் உள்ள செக்கானூரணிக்கு சுமார் 50 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்து வராதது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்து இருந்தால் மாற்று வழியில் சென்றிருப்போம். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளும் உரிய பதில் அளிப்பதில்லை திருமங்கலம் மற்றும் செக்கானூரணிக்கு செல்ல வேண்டிய பேருந்துகளின் குழப்ப நிலை தொடர்வதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய விசாரணை செய்து இரவு நேர கடைசி பேருந்து உரிய நேரத்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பயணிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
