• Thu. Apr 25th, 2024

உறவினர்கள் கைவிட்ட முதியவரை மனிதநேயத்துடன் முறைப்படி அடக்கம் செய்த காவல்துறையினர்..!

Byதரணி

Apr 8, 2023

ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இறந்து கிடந்த 78 வயது முதியவரை உறவினர்கள் அடக்கம் செய்ய முன்வராத நிலையில் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசாரே அடக்கம் செய்தனர். மேற்படி முதியவரை மனிதநேயத்துடன் முறைப்படி அடக்கம் செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு.
ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுகநேரி புறக்காவல் நிலையம் பகுதியில் 78 வயது முதியவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பிரபகுமார், திரு. வேல்பாண்டியன் மற்றும் முதல் நிலை காவலர் திரு. கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த முதியவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த சாமுவேல் மகன் தனசீலன் (78) என்பதும், அவர் இப்பகுதியில் சில நாட்களாக சுற்றித் திரிந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணை மேற்கொண்டதில், அவருடைய மருமகனான மாடத்தங்கம் என்பவரை கண்டுபிடித்து அவரை சம்பவ இடத்திற்கு அழைத்துவந்து மேற்படி முதியவரை காண்பித்ததில், மேற்படி மாடத்தங்கம் இறந்துகிடந்த முதியவர் தனது மனைவியின் தந்தை என்றும், அவர் தனது மனைவியின் சிறுவயதிலேயே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதால் தனக்கும் அவருக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை அதனால் அடக்கம் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து ஆறுமுகநேரி காவல்நிலைய போலீசாரே இறந்துகிடந்த முதியவரான தனசீலனை முறையாக அடக்கம் செய்தனர். இறந்துகிடந்த முதியவரை உறவினர்கள் அடக்கம் செய்ய முன்வராத நிலையில் மனிதநேயத்துடன் அடக்கம் செய்த ஆறுமுகநேரி போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *