• Sat. Apr 20th, 2024

வெளிநாட்டில் இருந்தே தமிழ்நாட்டில் திருடனை விரட்டிய அதிசயம்..!

Byவிஷா

May 18, 2022

திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனது வீட்டுக்குள் புகுந்த திருடனை, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரட்டியடித்து பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
திண்டுக்கல் எம்.வி.எம். நகர் 4-வது குறுக்குத்தெருவில் வசிக்கிற வழக்கறிஞர் லீனஸ் (60) என்பவரின் வீட்டில் திருட்டு முயற்சி நடந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அதன்பேரில் திண்டுக்கல் மேற்கு போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அமெரிக்காவில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக லீனஸ், தனது மனைவியுடன் 6 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று விட்டார். அதற்கு முன்பு தனது வீட்டை சுற்றிலும் அவர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினார். மேலும் அதன் அருகிலேயே ஒலிப்பெருக்கி, மைக், அலாரம் கருவி ஆகியவற்றையும் பொருத்தியிருந்தார். வீட்டின் உள்ளேயும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்திய அவர் வீட்டில் உள்ள மின்விளக்குகள், மின்மோட்டார்கள் ஆகியவற்றை நவீன தொழில்நுட்பம் மூலம் தனது செல்போன் மூலம் இயக்கும் வசதியையும் ஏற்படுத்திவிட்டு அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் மர்மநபர் ஒருவர் அவருடைய வீட்டுக்குள் நுழைய முயன்றார். இதனை கண்காணிப்பு கேமராக்கள் படம் பிடித்து லீனஸ் செல்போனுக்கு அனுப்பியது. அதைப்பார்த்த அவர், உடனடியாக தனது செல்போன் மூலம் ஒலிப்பெருக்கியை செயல்பட வைத்து வீட்டில் திருட வந்த நபரிடம் பேசினார். அப்போது வீட்டில் விலை உயர்ந்த நகைகளோ பொருட்களோ இல்லை. மேலும் வீடு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே உள்ளே செல்ல முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தார்.
ஒலிப்பெருக்கியில் அவர் பேசியதை கேட்ட மர்மநபர், வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்துகொண்டார். இதனால் லீனஸ் எச்சரித்ததை அலட்சியப்படுத்திவிட்டு வீட்டின் பூட்டை உடைக்க முயன்றார். இதையடுத்து உடனடியாக வீட்டில் உள்ள மின்விளக்குகள், மின்மோட்டார் மற்றும் அலாரம் ஆகியவற்றை தனது செல்போன் மூலமே லீனஸ் இயக்கினார். மேலும் திண்டுக்கல் மேற்கு போலீசாருக்கும் அவர் தகவல் கொடுத்தார்.
அலாரம் அடித்ததால், வீட்டுக்குள் செல்லாமல் தயங்கியபடி நின்ற மர்மநபரிடம், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட விவரத்தை லீனஸ் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து அலறி அடித்து தப்பியோடி விட்டார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தான் அமெரிக்காவில் இருந்தாலும் வீட்டில் திருட வந்தவரை விரட்டியடித்த வழக்கறிஞரின் செயல்பாட்டை அப்பகுதி மக்கள் வியந்து பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *