இலங்கையில் இளைஞர் ஒருவர் ராட்சத பட்டத்தின் கயிற்றில் தொங்கி உயிர்தப்பிய வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள மந்தகி அடுத்த புலோலி கம்பாவித்தை என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், சுமார் 13 அடியில் சதுர வடிவில் பட்டம் ஒன்றை செய்து கயிற்றால் கட்டி காற்றில் பறக்கவிட முயன்றனர். அந்த கயிற்றை பல இளைஞர்கள் பிடித்திருந்த நிலையில், 27 வயதான நடராசா மனோகரன் என்ற இளைஞர், முதல் ஆளாக கயிற்றை பிடித்திருந்தார்.
அப்போது திடீரென காற்று வேகமாக வீசியதால் மற்றவர்கள் கயிற்றை விட்டுவிட்டனர்.ஆனால் நடராசா எதிர்பாராத விதமாக கயிற்றை விட மறந்ததால் பட்டத்துடன் காற்றில் தூக்கி செல்லப்பட்டார். சுமார் 120 அடி உயரத்தில் தொங்கிய இளைஞரை காப்பாற்ற மற்ற இளைஞர்கள் முயன்றனர். ஆனால் எந்த பலனும் அளிக்கவில்லை. அந்தரத்தில் உயிர் பயத்தில் ஆடிய இளைஞர் நடராசா மனோகரன், கயிற்றை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.
சுமார் 12 நிமிடங்கள் அந்தரத்தில் தொங்கிய நடராசா மனோகரன், காற்றில் மெதுமெதுவாக கயிற்றை பிடித்து கீழே வந்தார். 30 அடி உயரத்திற்கு வந்த உடன் கீழே விழுந்தார். அவரை நண்பர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறு காயம் மட்டுமே ஏற்பட்டதால் அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.