• Fri. Apr 18th, 2025

மாணவியை வகுப்பறையில் வைத்து பூட்டிய சம்பவம்..,

தேனி மாவட்டம் கம்பத்தில், வகுப்பறையில் உறங்கிய மாணவியை வைத்து வகுப்பறையை பூட்டிச் சென்ற பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து
மாணவிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று SDPI கட்சியினர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனிமாவட்டம் கம்பத்தில் உள்ளது ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் நேற்று பத்தாம் வகுப்பு கடைசி நாள் தேர்வு நடைபெற்றுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் அன்று மதியத்திற்கு மேல் அனைவருக்கும் வகுப்புகள் நடைபெறும். ஆனால் நேற்று பத்தாம் வகுப்பின் கடைசி தேர்வு என்பதால் மதியத்திற்கு மேல் பகுப்புகள் நடைபெறவில்லை. ஆனால் இப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளார். உடல் நலக்குறைவாக வந்திருந்து அவர் பள்ளி வகுப்பறையில் அயர்ந்து தூங்கிவிட்டார். இந்நிலையில் பள்ளி ஊழியர்கள் வகுப்பறைகளை பூட்டும் போது, மாணவி அயர்ந்து தூங்குவதைக் கூட கவனிக்காமல், வகுப்பறையை பூட்டி, பள்ளியையும் பூட்டி சென்றனர்.

சிறுமி தூங்கி விழித்தபோது அறைகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு பயத்தில் கூச்சல் இட்டு உள்ளார். மாணவியின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் போலீசாரின் உதவியுடன், வகுப்பறை பூட்டை உடைத்து மாணவியை மீட்டனர். இந்த சம்பவமத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் பொறுப்பில்லாமல் கவனக்குறைவாக வகுப்பறையை பூட்டிய ஊழியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து
மாணவிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று SDPI கட்சியினர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து எஸ் டி பி ஐ கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக்அலி கூறுகையில், வகுப்பறையில் உடல் நலக்குறைவால் அசதியில் தூங்கிய நிலையில், பள்ளி ஊழியர் வகுப்பறையையும் கவனிக்காமல் பூட்டி சென்றுள்ளார். சிறுமி எழுந்து கதவு அடைத்திருப்பதை பார்த்து கூச்சல் இட்டுள்ளார். இதைக் கேட்டு பொதுமக்கள் பூட்டை உடைத்து சிறுமியை மீட்டனர். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இதே தவறு இங்கு நடந்துள்ளது.

இனி ஒரு முறை இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க
கவனத்தோடு பள்ளி நிர்வாகம் செயல்பட வேண்டும், பள்ளி முடிந்த பிறகு வகுப்பறைகளை பூட்டுவதற்கு முன்பு ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவியர்கள் இருக்கின்றனரா என்பதை உறுதி செய்வதுடன், கழிவறை போன்ற இடங்களிலும் மாணவ மாணவியர் இருக்கின்றனரா என்பதனை உறுதி செய்து பின்னர் பள்ளியின் கதவுகளை அடைக்கபட வேண்டும். கவனகுறைவாக செயல்பட்ட சமந்தப்பட்ட பள்ளி ஊழியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியை மகேஸ்வரி அவர்களிடம் கேட்டபோது, எங்கள் பள்ளிக்கு என்று வாட்ச்மேன் யாரும் இல்லை. பள்ளியை கூட்டுபவர் தான் நேற்று வகுப்பறைகளையும் பூட்டியுள்ளார். அவர் வகுப்பறைகளை பூட்டிவிட்டு வரும் போது நாங்களும் (தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியைகள்) இங்குதான் இருந்தோம். தவறை நியாயப்படுத்த விரும்பவில்லை. தெரியாமல் அவர் தவறு செய்துள்ளார். இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.