

உலகே வியந்து பார்க்கும் அளவிற்கு பிரமாண்டமாக நடக்கும் ஒரு விருது விழா என்றால் அது ஆஸ்கர் விருதுகள் தான்.ஒவ்வொரு கலைஞனும் இந்த விருதுக்காக பல துறைகளில் அயராத உழைப்பை செலுத்துகின்றனர்.அப்படி அசர வைக்கும் ஆஸ்கர் விருதை பற்றி சிறு தொகுப்பு தான் இன்று நாம் காண போகிறேம்…
ஆஸ்கர் விழாவை அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இந்த அமைப்பு 1927 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது 36 பேர் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தார்கள்.
இப்போது ஆறாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.அகாடெமி விருதில் வழங்கப்படும் பிரத்தேக தங்கச் சிலையை முதன்முதலில் வடிவமைத்தவர் ஜார்ஜ் ஸ்டான்லி என்பவர். 13.5 இன்ச் உயரமுள்ள (34.3 செ மீ) இந்த சிலையானது 3.856 கிலோ எடை கொண்டது.
இந்த தங்கச் சிலையை நடிப்புக்காக அதிகமாக தட்டிச் சென்றவர் கத்தரின் ஹெப்பர்ன். சிறந்த நடிகைக்கான விருதை இவர் நான்கு முறை வென்றுள்ளார். அமெரிக்க நடிகையான கத்தரின் 1934 ஆம் ஆண்டு நடந்த ஆறாவது அகாடெமி விருதுகளில் மார்னிங் க்ளோரி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை வென்றார். அதன் பின்னர் எட்டு படங்களுக்காக வெவ்வேறு காலகட்டத்தில் சிறந்த நடிகைக்கான விருதுப் போட்டிக்கான பிரிவில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தாலும் அவர் வெற்றி பெறவில்லை.

மூன்று திரைப்படங்கள் அதிகபட்சமாக 11 பிரிவுகளில் அகாடெமி விருது வென்றுள்ளன. பென் ஹர் திரைப்படம் 1959 ஆம் ஆண்டு 12 பிரிவுகளில் போட்டியில் இருந்தது, அதில் 11-இல் வென்றது. டைட்டானிக் திரைப்படம் 1997-ஆம் ஆண்டு 14 பிரிவுகளில் முன்மொழியப்பட்டு 11-இல் ஜெயித்தது. கடைசியாக லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் – தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங் திரைப்படம் 11 பிரிவுகளில் முன்மொழியப்பட்டு பதினோரு பிரிவிலும் விருதை வென்றது.


அகாடெமி விருது ஜெயிப்பவர்களுக்கு 45 நொடிகள் மட்டுமே மேடையில் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். நேர எல்லையை கடந்தால் மைக்ரோ ஃபோனிக்கு ஒலி இணைப்பு துண்டிக்கப்படும். அகாடெமி விருது வரலாற்றில் மேடையில் அதிக நேரம் பேசியவர் கிரீர் கார்சன். 1942 ஆம் ஆண்டு சிறந்த நடிகை விருது வென்ற இவர் ஆறு நிமிடங்கள் உரையாற்றினார். அதன் பின்னரே விருதை ஏற்றுக்கொள்ளும் உரைக்கான நேர அளவு குறைக்கப்பட்டது.

ஏ ஆர் ரஹ்மான்
ஆஸ்கர் வரலாற்றில் இரண்டு விருதுகள் வாங்கிய ஒரே இந்தியர் என்றப் பெருமையை ஏ.ஆர்.ரஹ்மான் பதித்தார். ஏ ஆர் ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்காக 2009 ஆம் ஆண்டு இரண்டு பிரிவுகளில் இந்த விருதை வென்றார்.விருது வென்ற போது தமிழில் சில வார்த்தைகள் பேசினார். ஆஸ்கர் மேடையில் தமிழ் மொழி முதல்முறையாக ஒலித்தது அந்த பொன் நாளில் தான்.
