மாமல்லபுரத்தில் தொடங்கிய பட்டம் விடும் திருவிழாவில், குஜராத் கலைஞரின் படைப்பில் உருவான திருவள்ளுவர் சிலை பட்டம் தமிழ் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுதான் ஹைலைட்டே!
மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. இதற்காக அப்பகுதியில் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் கடலோர இடம் தயார் செய்யப்பட்டு இருந்தது. அமைச்சர்கள் மதி வேந்தன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ராட்சத பட்டம் செய்யும் கலைஞர்கள் 80-க்கும் மேற்பட்ட பட்டங்களை பறக்க விட்டனர்.
குஜராத் கலைஞரின் வடிவமைப்பில் பறந்த கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பட்டம் விழாவிற்கு வந்திருந்த பெரியவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. இதேபோல் ஏலியன், கார்ட்டூன் வகை பட்டங்கள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. இந்த பட்டம் விடும் திருவிழா நாளை வரை நடைபெற உள்ளது.
முதல் நாளான நேற்று சுமார் 8ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். இதில் சுமார் 3 ஆயிரம் பேர் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பட்டம் விடும் திருவிழாவை காண சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பைக் மற்றும் கார்களில் ஏராளமானோர் வந்து குவிந்ததால் தேவனேரி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இரவில் கலை நிகழ்ச்சி, இசைவிழா, பேஷன் ஷோ, உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடந்தது. விடுமுறை நாளான இன்று பட்டம் விடும் திருவிழாவை காண அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை ராஜேஸ் வைத்யாவின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாய்லாந்தில் இருந்து வந்திருந்த சிறப்பு காற்றாடி கலைஞர் பெய்ரோ, பீட்டர் மற்றும் 6 பேர் கொண்ட குழுவினர் பிரமாண்ட பட்டங்கள் விட நேற்று முயற்சி செய்தனர். ஆனால் பட்டத்தின் எடைக்கு ஏற்ப காற்று வீசுவது குறைவாக இருந்ததால் பறக்கவிடப்படவில்லை. இன்று அவர்களின் ராட்சத பட்டங்கள் பறக்கும் என எதிர்பார்கபடுகிறது. இந்த பட்டம் விடும் திருவிழா நாளை வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.