• Thu. Apr 25th, 2024

மறக்கப்பட்ட மக்கள் தெய்வங்கள் : ஒரு வார்த்தையால் உயிரை மாய்த்த சாமி

மதுரை மாவட்டம் பேரையூர்அருகில் உள்ள சிலமலைப்பட்டி கிராமத்தில் சீலைக்காரி கோப்பம்மாள் என்று ஒரு சாமி இருக்கிறது. அதை சக்கிலியர் சாதியைச் சேர்ந்த மக்கள் கும்பிடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரிக்கு முந்திய நாள் சாமிகும்பிடும் பங்காளிகள் வேறு வேறு ஊர்களில் இருந்து வந்து சிலமலைப்பட்டியில் கூடுகிறார்கள். எல்லோருமாகக் கூடி மண்பானைகள் செய்யும் செட்டியார் வீட்டுக்குப் போகிறார்கள். அவரும் இவர்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். வாசலில் நிறைய மண் பானைகள் பரப்பி வைத்திருக்கிறார்கள். இதில் எது வேண்டுமானாலும் எடுத்திட்டுப்போங்க என்று வந்தவர்களிடம் கூறுகிறார். வந்தவர்கள் தேவையான பானைகளை எடுத்துக்கொண்டு போகிறார்கள். அந்தப் பானைகளில் பூ பழம், நட்சத்திரம் போட்ட சேவை காதோவை கருகமணி எல்லாம் வைத்து சிவராத்திரி அன்று சாமி கும்பிடுகிறார்கள். இந்தப் பானைகள் சுடாத பச்சைப் பானைகள், தெலுங்கில் ‘பச்சி குண்ட என்று சொல்கிறார்கள்.

இந்தச்சாமியின் கதை என்ன? ஒரு 50 அல்லது 60 வருடங்களுக்கு முன் நடந்த உண்மைக்கதை சிலமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பல சாதிச் சிறுவர்களும் சிறுமிகளும் தினசரி காலையில் ஆடுமாடுகளைப் பத்திக் கொண்டு காடுகளுக்குப் போவார்கள். பள்ளிக்கூடம் போகிற பழக்கம் அப்போதெல்லாம் ரொம்ப முக்கியம் என்று ஆகவில்லை. சந்தோசமாக ஆடு மேய்க்கப் போகிறார்கள். அதில் கோப்பம்மாள் என்கிற தொட்டிய நாயக்கர் சாதிப்பெண்ணும் இன்னொரு சக்கிலியர் சாதிப்பையனும் சேர்ந்தே போவார்கள். இருவரும் நல்ல நண்பர்கள். ஆடு மாடுகளைத் தண்ணீருக்கு விடுவது காடு பூராவும் பிரிந்து புல் மேய்கிற ஆடுமாடுகளை மாலையில் சேர்த்து ஒன்றாக்கி ஊருக்கு அழைத்து வருவது போன்ற வேலைகளில் அந்தச் சக்கிலியர் பையன் கோப்பம்மாளுக்கு ரொம்ப உதவியாக இருப்பான். மதியம் ஏதாவது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து ரெண்டுபேரும் அவரவர் கொண்டுவந்த சாப்பாட்டை சேர்ந்தே சாப்பிடுவார்கள். கோப்பம்மான். கொண்டு வரும் பண்டங்களையெல்லாம் அந்தப் டையனுக்கும் அன்போடு கொடுப்பாள். சோறு குழம்பு போன்றவற்றையும் கொடுப்பாள். அவனும் அவளுக்குக் கொடுப்பான். ரொம்ப வருடங்களாக இந்த நட்பு வளர்ந்தது. அந்தக் காட்டுக்குள்ளே சாதி இல்லை. கொஞ்ச நாளில் கோப்பம்மாள் பெரிய பெண்ணாகிவிட்டாள். தாவணியெல்லாம்போட்டு வளர்ந்த பெண்ணாகிவிட்டாள். அந்தச் சக்கிலியர் பையனும் இளைஞனாகிவிட்டான். ஆனாலும் ரெண்டு பேரும் எப்பவும்போல மாடு மேய்க்கப் போனார்கள். அவன் உதவி செய்வான். இவள் தின்பண்டங்கள் கொடுப்பாள். இதைப்பார்த்த கோப்பம்மாளின் சாதியைச் சேர்ந்த மாடுமேய்க்கும் பையன்களுக்குப் பொறாமையில் காதுகளிலும் மூக்குகளிலும் புகை வந்துவிட்டது. ஊருக்குப்போய் கோப்பம்மாளின் பெற்றோரிடம் வத்தி வைத்தனர். இன்னமாதிரி இன்னமாதிரியெல்லாம் நடக்குது என்று இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்லிவிட்டனர்.

சாயங்காலம் மாடுகளைப் பத்திக்கொண்டு வீடு திரும்பிய கோப்பம்மாளுக்கு வீட்டில் செமத்தியாகத் திட்டு விழுந்தது. நீயும் ஒரு பொம்பளைப் பிள்ளைதானா என்று வீட்டில் எல்லோரும் ஏசினார்கள். அவன் நல்ல பையன். எனக்கு மாடு மேய்ப்பதில் எவ்வளவோ ஒத்தாசையாக இருக்கிறான். ரொம்ப காலமாக சின்னப் பிள்ளையாக இருந்த காலத்திலிருந்து எனக்கு அவன் நண்பன் என்று கோப்பம்மாள் சொல்லி அழுதாள். ஆம்பளைப் பையன் அதுவும் ஒரு சக்கிலியப் பையன் கூட அப்படி ஒரு சகவாசம் தேவையா என்று வீட்டார் திட்டினார்கள். இனிமேல் அவன்கூடப் பேச்சு வச்சிக்கிட்டேன்னு தெரிஞ்சது உன்னைத் தொலைத்துவிடுவோம் என்று முடித்தார்கள். சரி என்று அவளும் அழுதுகொண்டே தலையை ஆட்டினாள். நண்பனாக இருப்பதற்கு ஆண் என்பதும் சாதியும் தடையாக இருக்கக்கூடாது என்று அவள் மனம் சொன்னது. ஆனாலும் வீட்டார் பேச்சைத் தட்ட முடியாமல் அவனோடு பேசாமலும் அவன் உதவியைக் கேட்காமலும் அவள் தனியாகவே போய் மாடு மேய்த்தாள். ஆனாலும் எல்லாம் ஒரு நாலு நாள்தான். மீண்டும் நண்பனோடு பேசிவிட்டாள். அதை மாடு மேய்க்கும் மற்ற பையன்கள் ஒளிந்திருந்து பார்த்துவிட்டார்கள். அன்று இரவே போய் மீண்டும் அவர்கள் வீட்டில் போட்டுக் கொடுத்துவிட்டார்கள். வீடு திரும்பிய கோப்பம்மாளுக்கு வீட்டில் வரவேற்பு கடுமையாக இருந்தது. அவள் மாடுகளைக் கட்டிவிட்டு வாசல்படியில் காலை வைத்தபோதே அங்கேயே நில்லு, உள்ளே வராதே அப்படியே அந்த சக்கிலியப் பயலோடேயே போயிரு” என்று ஆத்திரத்தோடு பெரியவர்கள் கூப்பாடு போட்டார்கள். இன்னும் ‘கன்னா பின்னா’ ஓ என்று கத்தினார்கள். அவள் தன் இரு காதுகளையும் பொத்திக் கொண்டு அழுதாள். தன்னைப் பெற்ற தாயும் தந்தையுமே இப்படித் தப்பாகப் பேசுகிறார்களே என்று அழுகை அழுகையாக வந்தது. வாசல்படி ஓரம் மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டே இருந்தாள். இரவு வெகு நேரமாகிவிட்டது. வீட்டார் எல்லோரும் சாப்பிட்டுப் படுத்துவிட்டார்கள். அவளை யாரும் சாப்பிடக்கூப்பிடவில்லை. அவள் அதே இடத்திலேயே முழங்காலைக் கட்டிக் கொண்டு விசும்பிக்கொண்டிருந்தாள். ஊரே அடங்கிவிட்டது. நள்ளிரவு ஆனது அவள் எழுந்தாள்.

தெருவில் ஒரு நாதியில்லை, ஒரே இருட்டு நாய்கள் குரைத்தன. எங்கோ ஒரு ஆந்தை அலறியது. அவள் எதற்கும் பயப்படவில்லை. ஊரைவிட்டு வெளியேறினாள். ஒரு தப்பும் செய்யாத என்னையும் அவனையும் பற்றி இப்படிப் பேசிவிட்டார்களே என்பது மட்டும்தான் அவள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. இனி இந்த உலகத்தில் வாழக்கூடாது என்று முடிவு எடுத்தாள் , ஊருக்கு வெளியே மண்பானைகளை சுடுகிற சூளை எரிந்து கொண்டிருந்தது. இரவில் சூளைக்குள் பச்சை மண் பானைகளை அடுக்குவார்கள். தீ மெல்ல மெல்லக் கனன்று எரியும்படி மூட்டிவைத்துவிட்டு வீட்டுக்குப் போய்விடுவார்கள். காலையில் வந்து பார்த்தால் பச்சை மண்பானைகள் எல்லாம் கட்ட பானைகளாகத் தயாராக இருக்கும் அன்றும் அப்படித்தான் பானை செய்யும் செட்டியார் இரவில் சூளையை தீமூட்டி விட்டு வீட்டுக்குப் போய்விட்டார். கோப்பம்மாள் அந்தச் சூளைக்கு முன்னால் நின்று ஒரு நிமிடம் யோசித்தாள். பிறகு மெதுவாக சூளையைக் கொஞ்சம் பிரித்து அதற்குள் இறங்கினாள். குளிர்ந்த தண்ணீருக்குள் குளிப்பதற்கு இறங்குவது போல நிதானமாக அவள் தீக்குள் இறங்கினாள். பானைகளோடு ஒரு பானையாக அவள் உடல் வெந்து போகத் துவங்கியது.

அதிகாலையில் வீட்டார் எழுந்து பார்த்தபோது கோப்பம்மாளைக் காணவில்லை. அந்தச் சக்கிலியனோடு தான் ஓடிப்போய்விட்டாள் என்று நினைத்து ஆத்திரமடைந்தார்கள். அவனைக் கொல்லாமல் விடக்கூடாது என்று அருவாள் கம்புகளைத் தூக்கிக் கொண்டு சக்கிலியர் குடியிருக்கும் பக்கம் போனார்கள். அங்கே அந்தச் சக்கிலியர் பையன் நடந்தது எதுவுமே தெரியாமல் வாசலில் சாக்கை விரித்து நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். தூங்கிக் கொண்டிருந்த அவனைக் கம்பால் அடித்தார்கள்.

தனக்கு ஒண்ணுமே தெரியாதே என்று கையெடுத்துக் கும்பிட்டான். இங்கே அதிகாலையில் சுட்ட பானைகளை எடுப்பதற்காக வந்த செட்டியார் அதிர்ச்சியடைந்தார். உள்ளே ஒரு பெண் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து அலறினார். இன்னும் உயிர் போகாமல் இருந்தது. கோப்பம்மாள் “செட்டியாரே.. பயப்படாதீர்கள். நாந்தான் கோப்பம்மாள். ஒரு பாவமும் அறியாத என்னையும் அந்தச் சக்கிலியர் பையனையும் சேர்த்து என்னைப் பெற்றவர்களே தப்பாகப் பேசிவிட்டார்கள். ஆகவே நான் இந்த பூமியில் வாழப் பிடிக்காமல் போகிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் என் உயிர் போய்விடும். நான் இப்படிச் செத்த சேதியை என்னைத் தேடிவரும் என் குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டாம் என்மீது அன்பு வைத்த பாவத்துக்காக வீண் பழிக்கு ஆளான அந்தச் சக்கிலிய குலத்து மக்களிடம் மட்டும் நடந்ததைச் சொல்லுங்கள். நான் செத்தபிறகு எனக்குக் கோவில் கட்டி அவர்கள் கும்பிடட்டும். அவர்களுக்கு நீங்கள்தான் பானைகொடுத்து என்னை வழிபட உதவ வேண்டும்.

பானைக்குக் காசு கேட்கக்கூடாது” என்று சொல்லிவிட்டுச் செத்துவிட்டாள். மேல்சாதிப் பெண் ஒருத்தியைத் தேடிவந்து அந்தப் பையனைப்போட்டு அடித்த பிறகு ‘இனிமேல் நமக்கு இந்த ஊரில் பாதுகாப்பு கிடையாது” என்று சக்கிலியர் சாதி மக்கள் எல்லோரும் அன்றே ஊரைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டார்கள். அழகர்சாமி என்பவர் மட்டுமே அந்தச் சூளை வழியாகப் போனார். அவரை அழைத்து செட்டியார் நடந்த கதையைப் பூராவும் சொன்னார். அப்போது சூளையில் கோப்பம்மாள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகிவிட்டாள். அவளது சேலையில் ஒரு முழம் துணி மட்டும் எப்படியோ வேகாமல் கிடந்தது. அதைத் தன் கைகளில் எடுத்து வைத்துக் கொண்டு தாயீ. தாயீ.. என்று அழகர்சாமி கதறி அழுதார். நட்சத்திரங்கள் பதித்த டிசைன் போட்ட சேலை அது. அவருடைய சாதி மக்கள் எல்லோரும் போய்விட்டாலும் அவர் மட்டும் அந்த ஊரிலேயே தங்கி கோப்பம்மாளுக்குக் கோவில் கட்டி அவரே பூசாரியாக இருந்து வழிபடத் துவங்கினார். அப்படியே வருடாவருடம் சக்கிலியர் சாதி மக்கள் எல்லோரும் கூடி வழிபடும் பழக்கம் வந்துவிட்டது.
வழிபடும் விதத்துக்குள்ளேயே எத்தனை ஆழமான சோகக் கதை ஒன்று புதைந்து கிடக்கிறது? கூட வாழ்ந்த மனிதர்கள் சாதாரணமாகச் சாகாமல் இப்படிப் பரிதவித்துச் செத்தால் அவர்களை தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். கள்ளம் கபடு இல்லாமல் நட்போடு பழகிய கோப்பம்மாள் வீண் வந்த ஒரு சொல் தாங்க முடியாமல் உயிரை பழிச்சொல்லுக்கு ஆளாகி மாய்த்திருக்கிறாள்.
இப்படியும் பல சாமிகள் நம் ஊரில் உருவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *