விருதுநகரில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரின் சகோதரர் சண்முக பாண்டியன், பட்டாசு தொழிலாளர்களின் குறைகளை தரையில் அமர்ந்து கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். தர்மபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்ப்புமணிக்கு ஆதரவாக 2 மகள்களும் தீவிரமாக வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக மனைவி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதனைதொடர்ந்து விருதுநகரில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக சகோதரர் சாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். இப்படி தமிழகத்தில் வேட்பாளருக்கு ஆதரவாக வாரிசுகள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சாத்தூர் அடுத்த நடுச்சூரங்குடியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிக்க சென்ற சண்முக பாண்டியன் பட்டாசு தொழிலாளர்களுடன் தரையில் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர்களது குறைகளை கேட்டுறிந்த சண்முக பாண்டியன் தனது சகோதரர் வெற்றி பெற்றால் நிச்சயம் பட்டாசு தொழிலில் உள்ள பிரச்சனைகளை முழுமையாக தீர்ப்பார் என உறுதி அளித்தார்.