• Fri. Apr 19th, 2024

தேர்தல் சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல்

வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்டத் திருத்த மசோதாமக்களவையில் இன்று அறிமுகம்செய்யப்படுகிறது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.


தேர்தலில் கள்ள ஓட்டுகளை தவிர்க்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இதற்காக தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. இது தொடர்பான தேர்தல் சீர்திருத்தங்களை செய்வதற்கு மத்திய அரசுக்கு 2019 ஆகஸ்டில் தேர்தல் ஆணையம் சில பரிந்துரைகளை செய்திருந்தது.


கடந்த வாரம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா2021 என்ற பெயரில் இது தாக்கல் செய்யப்பட உள்ளது.


இதன்படி, 18 வயது நிரம்பிய ஒருவர் வாக்காளராக பதிவு செய்யும்போது அவரது அடையாளத்தை நிரூபிக்க, அவரிடம் ஆதார் எண்ணை தேர்தல் பதிவு அதிகாரிகள் கேட்கஇம்மசோதா அனுமதி வழங்குகிறது. ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களிடமும் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் எண்ணை தேர்தல் பதிவு அதிகாரிகள் கேட்கலாம்.
குடிமக்களின் அந்தரங்க உரிமை தொடர்பாக ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இருப்பதால், இது கட்டாயமாக்கப்படாது. வாக்காளரின் விருப்பத்தின் அடிப்படையிலேயே வாக்காளர் அடையாள அட்டை – ஆதார் எண் இணைப்புசெயல்படுத்தப்படும். இது கட்டாயமில்லை என்றும் ஒருவர் தகுந்த காரணங்களால் ஆதார் எண்ணை கொடுக்க முடியாவிட்டால் அவரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு மறுக்க முடியாது என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.


இதுதவிர மேலும் 3 முக்கிய தேர்தல் சீர்திருத்தங்களுக்கும் இம்மசோதா வகை செய்கிறது. இப்போதுள்ள முறைப்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயதுநிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்கலாம். ஜன.2-ம் தேதிக்கு பிறகு 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்ய ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க ஆண்டுக்கு 4 முறை புதிய வாக்காளர் சேர்க்கை நடத்தப்படும். ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் மசோதா வகை செய்கிறது.
மேலும், இப்போது பள்ளி, கல்லூரிகள், முக்கிய நிறுவனங்களின் வளாகங்களை தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொள்கிறது.

ஆனால், இதற்கு எதிர்ப்புகள் எழுகின்றன. புதிய தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா மூலம் தேர்தல் ஆணையம் எந்த ஒரு வளாகத்தையும் தேர்தல்நடத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ள அதிகாரம் அளிக்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகியமாநிலங்களில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்நிலையில், புதிய மசோதா அறிமுகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே மசோதாநிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *