• Wed. Dec 11th, 2024

வயதான தம்பதியை பணம், நகைக்காகக் கொலை செய்து புதைத்த ஓட்டுநர்

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய வயதான தம்பதியரைக் கொலை செய்து புதைத்த ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்- அனுராதா என்ற வயதான தம்பதி அமெரிக்காவில் படித்து வரும் தமது பிள்ளைகளைச் சந்தித்துவிட்டு, சென்னை திரும்பினர். இருவரையும் அவரது கார் ஓட்டுநரான நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணா காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், இருவரும் வீட்டிற்கு வராததால் அவர்களை கார் ஓட்டுநர் கடத்திவிட்டதாக உறவினர்கள் காவல்துறையில், புகார் அளித்தனர்.

விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், கிருஷ்ணா நேபாளத்துக்கு தப்பிச் சென்றுக் கொண்டிருப்பதை அறிந்தனர். அவர் ஆந்திராவில் சென்றுக் கொண்டிருந்த போது, தமிழக காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில் அவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்து ஒப்படைத்தனர். பின்னர், அவரிடம் விசாரணை நடத்திய போது, இருவரையும் கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்துவிட்டதாக ஓட்டுநர் கூறியுள்ளார்.

மேலும், அவர்களது வீட்டில் இருந்த பீரோவில் 20 லட்சம் ரூபாய் ரொக்கம், நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் செல்லும் போது, அவர் சிக்கியுள்ளார். இதனிடையே, புதைக்கப்பட்ட இருவரின் உடலையும் தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.